இந்திய கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது பலரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. பல்லாயிரம் கோடி வருமானம் இந்திய கிரிக்கெட்டை சுற்றி மட்டுமே இருந்து கொண்டு இருக்கிறது. இந்திய அணியில் தற்போது உச்சத்தில் இருக்கும் பல நட்சத்திரங்களின் ஆரம்பகால வாழ்க்கை, கண்ணீராலும், தியாகத்தாலும், வறுமையாலும் சூழப்பட்டு இருந்துள்ளது. பண கஷ்டம், சமூக அழுத்தங்கள், குடும்ப போராட்டங்கள் என அனைத்தையும் தாண்டி, தங்களது அசைக்க முடியாத திறமையாலும், விடாமுயற்சியாலும் இன்று உலகமே வியக்கும் சாதனையாளர்களாக பலர் உயர்ந்து நிற்கிறார்கள். மிகவும் ஏழ்மை குடும்பத்தில் இருந்து கிரிக்கெட்டிக்கு வந்து இன்று பல கோடிக்கு அதிபதியாக இருக்கும் நட்சத்திர வீரர்களை பற்றி பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source
மகேந்திர சிங் தோனி
இந்திய கிரிக்கெட்டின் சரித்திரத்தையே மாற்றியமைத்த தோனியின் கதை அனைவருக்கும் தெரிந்ததே. ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தோனியின் தந்தை, ஒரு பம்ப் ஆபரேட்டராக பணிபுரிந்தார். குறைந்த வருமானத்தில், கிரிக்கெட் என்பது அவர்களது குடும்பத்திற்கு ஒரு ஆடம்பர கனவாகவே இருந்தது. திறமை இருந்தும், இந்திய அணிக்குள் நுழைவதற்கான பாதை அவ்வளவு எளிதாக இல்லை. குடும்பத்தின் நிதி நிலைமைக்காக, இந்திய ரயில்வேயில் TTE வேலைக்கு சேர்ந்தார். பின்னர் தனது கடின உழைப்பால், உள்ளூர் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2004ல் இந்திய அணிக்குள் நுழைந்து இன்று அனைவரின் நட்சத்திர நாயகனாக உயர்ந்துள்ளார்.
முகமது சிராஜ்
முகமது சிராஜின் கிரிக்கெட் பயணம் பலரும் அறிந்திடாதது. ஹைதராபாத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சிராஜின் தந்தை, ஒரு ஆட்டோ ஓட்டுநர். வறுமை இருந்தாலும், தனது மகனின் கிரிக்கெட் கனவிற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது அவர் தான். பலமுறை குடும்ப செலவுகளையும் தாண்டி, சிராஜுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார். டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிராஜின் வாழ்க்கையை ஐபிஎல் ஏலம் மாற்றியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, அவரது தந்தை காலமானார். அந்த பெரும் சோகத்திலும், நாட்டிற்காக விளையாட வேண்டும் என்ற தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக, தாயகம் திரும்பாமல் அணியுடனே தங்கி, தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார் சிராஜ்.
உமேஷ் யாதவ்
நாக்பூர் அருகே உள்ள கபர்கேடா என்ற ஊரில், ஒரு நிலக்கரி சுரங்க தொழிலாளியின் மகனாக பிறந்தவர் உமேஷ் யாதவ். குடும்பத்தின் வறுமை காரணமாக, தனது மகன் ஒரு அரசு வேலையில் சேர வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். உமேஷும் அதற்காக முயற்சி செய்து தோல்வியடைந்தார். தனது 20வது வயதில் தான், அவர் லெதர் பந்தில் கிரிக்கெட் விளையாட தொடங்கி உள்ளார். அவரது அசாத்தியமான பந்து வீச்சு உள்ளூர் போட்டிகளில் இருந்து ரஞ்சி டிராபி, பின்னர் இந்திய அணி என மிக வேகமாக உயர்த்தியது.
ரவீந்திர ஜடேஜா
ஒரு வாட்ச்மேனின் மகனாக பிறந்து, இன்று உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக ஜொலிக்கும் ஜடேஜாவின் கதை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும். ஜடேஜா குடும்பம் ஒரு சிறிய ஒற்றை அறை வீட்டில் வசித்தது. தந்தை அவரை இராணுவத்தில் சேர்க்க விரும்பினாலும், ஜடேஜாவின் மனம் முழுவதும் கிரிக்கெட்டே நிறைந்திருந்தது. தனது டீன் ஏஜ் வயதில், தாயை இழந்தாலும் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தி இன்று உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர் என்று அழைக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
ரிங்கு சிங்
உத்தரப் பிரதேச மாநிலம், அலிகாரில் பிறந்த ரிங்கு சிங் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய உந்து சக்தி. அவரது தந்தை சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக, ரிங்கு சிங் துப்புரவு பணிக்கு செல்லவும் தயாரானார். ஆனால், ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த ரிங்கு சிங். தற்போது இந்திய டி20 அணியில் முக்கிய வீரராக உள்ளார்.
About the Author
RK Spark