காத்மாண்டு: நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
நேபாள பிரதமர் சுசீலா கார்க்கி, எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக குல்மான் கிசிங்கையும், உள்துறை மற்றும் சட்ட அமைச்சராக ஓம் பிரகாஷ் ஆர்யலையும், நிதி அமைச்சராக ரமேஷோர் கானலையும் நியமித்து தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். இந்த மூன்று அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.
புதிய அமைச்சராக பொறுப்பேற்ற குல்மான் கிசிங் முன்பு நேபாள மின்சார ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார், மேலும் மின்சார ஆணையத்திற்கு பெரும் வருவாய் ஈட்டி தந்ததுடன், நீண்டகால மின்வெட்டுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.
முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிரகாஷ் ஆர்யல், காத்மாண்டு மேயர் பாலன் ஷாவின் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். நிதித்துறைக்கு பொறுப்பேற்றுள்ள ரமேஷோர் கானல், ஒரு அனுபவமிக்க நிதி அதிகாரி ஆவார், இவர் நிதி செயலாளராகவும் பணியாற்றியவர்.
பின்னணி என்ன? – நேபாளத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், தொழிலதிபர்கள், பணக்காரர்களின் வாரிசுகள் பணத்தை தண்ணீர்போல செலவழிப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சந்தோஷமாக இருப்பது பொதுமக்களை எரிச்சலடைய செய்தது. இந்த செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதையடுத்து, நேபாளம் முழுவதும் சமூக வலைதளங்களுக்கு அரசு கடந்த 4-ம் தேதி தடை விதித்தது. இதனால் மேலும் கோபம் அடைந்த இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. அதில் 75 பேர் உயிரிழந்தனர். 1,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதைதொடர்ந்து, நேபாளம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டது. பிரதமர் சர்மா ஒலி, மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதன்பிறகு, போராட்டக் குழுவினருடன் ராணுவ தளபதி அசோக் சிக்டெல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார்.
இந்த சூழ்நிலையில், 2026 மார்ச் 5-ம் தேதி நேபாளத்தில் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், இடைக்கால பிரதமர் சுசீலா தலைமையிலான நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றத்தையும் அதிபர் ராம் சந்திரா கலைத்துள்ளார்.