வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

புதுடெல்லி,

மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க. இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் என 72 ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “வக்பு சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘பொது ஒழுங்கு, பொது சுகாதாரம் போன்றவை பாதிக்கப்படும்போது மட்டுமே இயற்றப்படும் கட்டுப்பாடுகளைக் கொண்ட சட்டங்களை வக்பு சட்ட திருத்தம் கொண்டுள்ளது. இது மதம் சார்ந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை பறிக்கிறது’ என வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து 38 கூட்டங்களை நடத்தி 98.2 லட்சம் கோரிக்கை மனுக்களை பரிசீலித்தது. அதன்பிறகே நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது” என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இடைக்கால உத்தரவை கோர்ட்டு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வக்பு திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு, தனிப்பட்ட குடிமக்கள் உரிமை பற்றி முடிவெடுக்க கலெக்டரை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வக்பு நிலம் தொடர்பாக கலெக்டருக்கு அதிகாரம் தரும் விதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், வக்பு சொத்துகளை அளிப்போர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என வக்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. மத்திய வக்பு வாரியத்தில் 4 இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக் கூடாது, அதே சமயம் மாநில வக்பு வாரியத்தில் 3 இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.