கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா கே.இரபகேரா கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகள் ரேணுகா(வயது 18). அதே கிராமத்தில் வசித்து வருபவர்கள் சுனிதா(17) மற்றும் திம்மக்கா(18). தோழிகளான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்துவிட்டு, அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதுபற்றி அறிந்த கிராம மக்கள் ரேணுகா, சுனிதா, திம்மக்கா ஆகிய 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரேணுகா மட்டும் இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் தேவதுர்கா போலீசார் கிராமத்திற்கு சென்று விசாரித்தனர்.
அப்போது ரேணுகா ஒரு வாலிபரை காதலித்துள்ளார். ஆனால் குடும்பத்தினர் வேறு ஒரு வாலிபரை பார்த்து திருமணம் பேசி முடிவு செய்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அந்த வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இதனால் காதலனை மறக்க முடியாமல் தவித்த ரேணுகா தற்கொலை செய்தது தெரியவந்தது. அதுபோலவே மற்ற இரு தோழிகளான திம்மக்கா மற்றும் சுனிதாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தங்களுக்கும் வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என நினைத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தேவதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.