Asia Cup 2025: இந்தியா மற்றும் ஓமன் அணிகள் தங்களது கடைசி லீக் சுற்றுப் போட்டியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) மோத உள்ளன. இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. ஓமன் அணி தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டதால், சில முக்கிய வீரர்களுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கலாம். ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஓய்வு கொடுக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள் குறித்து இங்கே காணலாம்.
Add Zee News as a Preferred Source
ஜஸ்பிரித் பும்ரா
அண்மைக்காலமாக பும்ராவின் உடல் தகுதி தொடர்ந்து ஒரு பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இங்கிலாந்து தொடரில் வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியிருந்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனவே, ஓமனுக்கு எதிரான போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்து, அவரது பணிச்சுமையை நிர்வகிக்க அணி நிர்வாகம் முடிவு செய்யலாம். அதேசமயம், அர்ஷ்தீப் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பி, இந்தியாவின் வேகப்பந்துவீச்சுத் தாக்குதலை முன்னெடுக்கத் தயாராக இருக்கிறார். டி20 போட்டிகளில் அவர் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா
இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கும் இந்திய அணி ஓய்வு கொடுக்க வாய்ப்புள்ளது. அவர் இதுவரை பேட்டிங் செய்ய வாய்ப்பு பெறவில்லை. இரு போட்டிகளிலும் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக மட்டுமே களமிறங்கினார். அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, ஹர்ஷித் ராணாவுக்குத் தனது முதல் ஆட்டத்தை விளையாட வாய்ப்பு அளிக்கலாம். ஹர்ஷித் ராணா இந்திய அணியின் 2025 சாம்பியன்ஸ் டிராபி வென்ற அணியில் ஒரு அங்கமாக இருந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அர்ஷ்தீப்பிற்கு உறுதுணையாகப் பந்துவீசலாம்.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் இதுவரை பேட்டிங் செய்ய வாய்ப்பு பெறவில்லை, ஆனால் இரண்டு போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காததால், பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அணி நிர்வாகம் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, ஜிதேஷ் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கலாம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் 2025 தொடரில் அவர் சிறப்பாக விளையாடியதன் அடிப்படையில், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த ஜிதேஷுக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். இருப்பினும், இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சனே தொடர்ந்து இருப்பார்.
About the Author
S.Karthikeyan