சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரமான ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் இன்று (செப் 17) உயிரிழந்துள்ளார்.
46 வயதான ரோபோ சங்கர், மஞ்சள் காமாலை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில், மீண்டும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கல்லீரல் மற்றும் சீறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார்.
ரோபோ சங்கர் மறைவுக்கு திரையுலகினர், கலையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரோபோ சங்கர் தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி, 2007 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார்.

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தோன்றியதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள வீடுகளில் இடம்பிடித்தார். அதன்பின், வெள்ளித்திரையிலும் அசத்தினார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுஷின் மாரி உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழடைந்தார்.
ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், “சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.