India vs Oman: ஆசிய கோப்பை 2025 தொடரின் கடைசி குரூப் சுற்று போட்டியில் இந்தியா – ஓமன் அணிகள் மோதின. சூப்பர் 4 போட்டிக்கு முன் இந்திய அணிக்கு ஒரு பயிற்சி போட்டியாக பார்க்கப்பட்டது.
Add Zee News as a Preferred Source
India vs Oman: இந்திய அணி செய்த மாற்றங்கள்
அதன்படி, டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
India vs Oman: இந்திய அணியின் பேட்டிங் பரிசோதனை
இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், 2வது ஓவரில் சுப்மான் கில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். நம்பர் 3இல்ஆச்சர்யமளிக்கும் விதமாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அபிஷேக் சர்மா அதிரடி காட்ட தொடங்கினார். தொடர்ந்து, 15 பந்துகளில் 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார், அபிஷேக். அதன்பின் பேட்டிங் ஆர்டரே தொடர்ச்சியாக அதிர்ச்சியளித்தது. ஹர்திக் பாண்டியா களமிறங்கி 1 ரன்னில் ரன்அவுட்டானார்.
India vs Oman: சஞ்சு சாம்சன் சதம்
நம்பர் 5இல் அக்சர் பட்டேல் களமிறங்கி 26 ரன்களையும், நம்பர் 6இல் சிவம் தூபே வந்து 5 ரன்களையும் அடித்தனர். நம்பர் 7இல்தான் திலக் வர்மா களமிறங்கினார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க நம்பர் 8இல் ஹர்ஷித் ராணா களமிறங்கினார். திலக் வர்மாவும் விரைவாக 29 ரன்களை குவித்த ஆட்டமிழந்தார். அர்ஷ்தீப் சிங் 1 ரன்னில் ரன்அவுட்டானார். கடைசியில் ஹர்ஷித் – குல்தீப் இணை களத்தில் இருந்தது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த ஹர்ஷித் இன்னிங்ஸை நிறைவு செய்தார். கடைசி வரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கவில்லை.
India vs Oman: மிரட்டிய பைசல் ஷா
அதன்படி, இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. ஹர்ஷித் ராணா 13, குல்தீப் 1 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஓமன் பந்துவீச்சில் பைசல் ஷா, ஜித்தேன் குமார், ஆமீர் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் பைசல் ஷா 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்தார், 1 மெய்டன் ஓவரையும் வீசினார். மேலும், அவர் சுப்மான் கில்லை போல்டாக்கிய பந்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம், அந்தளவிற்கு சிறப்பான பந்து அது.
India vs Oman: அதிர்ச்சி கொடுத்த ஓமன்
189 ரன்கள் என்ற இலக்கை ஓமன் அடிக்கவே அடிக்காது, 100 ரன்னுக்குள் சுருண்டுவிடுவார்கள், 15 ஓவர் வரை தான் தாக்குப்பிடிப்பார்கள், ஆல்-அவுட்டாகிவிடுவார்கள் என்ற பலரும் நினைத்தனர். ஆனால், ஓமன் இவற்றை தவிடுபொடியாக்கியது. ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் பவர்பிளேவில் தலா 2 ஓவர்களை வீசினர். ஓமன் அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்களை அடித்தது. அடுத்து குல்தீப் வந்து 9வது ஓவரில் 1 விக்கெட்டை எடுத்தார். கேப்டன் ஜதிந்தர் சிங் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
India vs Oman: ஆமீர் காலிம் – முர்சா மிரட்டல் ஜோடி
அடுத்து ஆமீர் காலிம் உடன் ஹம்மாத் முர்சா களமிறங்கினார். இந்த இணைதான் இன்றைய போட்டியின் முக்கிய ஹைலைட் எனலாம். இந்திய அணி திலக் வர்மாவுக்கும், அபிஷேக் சர்மாவுக்கும் தலா 1 ஓவரை கொடுத்தது. அதில் திலக் வர்மாவுக்கு எதிராக 8 ரன்கள், அபிஷேக் சர்மாவுக்கு எதிராக 12 ரன்கள் எடுக்கப்பட்டது. தூபேவின் பந்துவீச்சிலும் ரன்கள் பறந்தது.
India vs Oman: ஆசிய கோப்பையில் சாதனை
அபிஷேக் சர்மா பந்துவீச்சில் ஒரு சிக்ஸர், தூபே ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்க காலிம் அரைசதம் அடித்து மிரட்டினார். இது அவருக்கு 2வது சர்வதேச அரைசதமாகும். அவர் அதை மைதானத்தில் கொண்டாடி மகிழ்ந்தார். அவருக்கு வயது 43. அந்த வகையில், ஆசிய கோப்பை தொடரில் அதிக வயதை கொண்ட ஒருவர் அடித்த அரைசதம் இதுதான். காலிம் – முர்சா இணை களத்தில் இருக்கும் வரை ஓமன் அணிக்கு வெற்றி வாய்ப்பும் பிரகாசமாகவே இருந்தது.
India vs Oman: ஆட்டத்தை மாற்றிய கேட்ச்
தொடர்ந்து, குல்தீப் யாதவ் வீசிய 16வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் முர்சா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். அர்ஷ்தீப் வீசிய 17வது ஓவரிலும் ரன்கள் கசிந்தன. இந்திய அணி கொஞ்சம் தடுமாறியது. 18வது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். முதலிரண்டு பந்துகளிலும் பவுண்டரி அடித்த காலிம், அந்த ஓவரில் பைன்-லெக்கில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால், ஹர்திக் பாண்டியா பாய்ந்து சென்று அந்த கேட்ச்சை பிடித்து ஆட்டத்தையே மாற்றிவிட்டார். காலீம் 46 பந்துகளில் 64 ரன்களை அடித்திருந்தார். அதில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் அடக்கம்.
India vs Oman: அர்ஷ்தீப் 100*
அதன்பின் ஓமன் அணியின் அந்த அதிரடி குறைய தொடங்கியது. முர்சாவும் அரைசதம் கடந்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். 19வது ஓவரில் முர்சாவும் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே அர்ஷ்தீப் சிங் விக்கெட் எடுத்தார். இதன்மூலம் அர்ஷ்தீப் சிங் முக்கிய மைல்கல்லை அடைந்தார். அதாவது இந்தியா விளையாடும் 250வது டி20ஐ போட்டியில், அர்ஷ்தீப் சிங் 100வது டி20ஐ விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார், இது 64 போட்டிகளில்… மேலும், இந்திய அணிக்காக டி20ஐயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அவர்தான்.
India vs Oman: ஆட்ட நாயகன் சஞ்சு
கடைசி ஓவரில் ஒரு சில பவுண்டரிகள் வந்தாலும் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்படி இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் என நால்வர் மட்டுமே விக்கெட எடுத்தார்கள். வெற்றி பெற்ற இந்திய அணிக்காக அரைசதம் அடித்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
India vs Oman: இந்திய அணியின் சூப்பர் 4 போட்டிகள்
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு 3 போட்டிகள் உள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. செப். 24ஆம் தேதி இந்தியா – வங்கேதசம் அணிகள் மோதுகின்றன. செப். 26ஆம் தேதி இந்தியா – இலங்கை மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றில் முதலிரண்டு இடத்தை பிடித்த அணிகள் செப். 28இல் நடைபெறும் இறுதிப்போட்டிக்குச் செல்லும்.