ஹிட்மேன் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது அதிரடி பேட்டிங்கால் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். சமீபத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், 2025-ம் ஆண்டு நிலவரப்படி ரோஹித் சர்மாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.230 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது இந்த பிரம்மாண்ட வருமானத்திற்கு பின்னால், பிசிசிஐ ஒப்பந்தம், ஐபிஎல் சம்பளம், பிராண்ட் விளம்பரங்கள் என பல வழிகள் உள்ளன.
Add Zee News as a Preferred Source
பல வழிகளில் குவியும் வருமானம்
பிசிசிஐ சம்பளம்
பிசிசிஐயின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில், மிக உயர்ந்த வகையான A+ கிரேடு பிரிவில் ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார். இதன் மூலம், ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளமாக பெறுகிறார். இது தவிர ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம் மற்றும் டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் பெற்றுள்ளார்.
ஐபிஎல் சம்பளம்
ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக, ஒவ்வொரு சீசனிலும் சம்பளமாக மட்டும் ரூ.16 கோடி பெறுகிறார். ஐபிஎல் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டிய வீரர்களில் ஒருவராகவும் அவர் திகழ்கிறார்.
பிராண்ட் விளம்பரங்கள்
ரோஹித் சர்மாவின் புகழும், மக்கள் செல்வாக்கும், அவரை பல முன்னணி பிராண்டுகளின் விருப்பமான முகமாக மாற்றியுள்ளது. Adidas, CEAT, OPPO, Hublot போன்ற 24க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய பிராண்டுகளுக்கு அவர் விளம்பர தூதராக உள்ளார். ஒரு பிராண்ட் விளம்பரத்திற்காக, அவர் சுமார் ரூ.5 கோடி வரை கட்டணமாக பெறுகிறார். பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்கள் மூலம் மட்டுமே, ஆண்டுக்குச் சுமார் ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறார் ரோஹித் சர்மா.
சொத்துக்கள் மற்றும் கார்கள்
ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு, அவரது வாழ்க்கை முறையிலும் பிரதிபலிக்கிறது. மும்பையின் வொர்லி பகுதியில், அரபி கடலை பார்த்தவாறு அமைந்துள்ள 6,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு பிரம்மாண்டமான சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.30 கோடி ஆகும். மேலும் ரோஹித் சர்மா கார்களின் மீது மிகுந்த பிரியம் கொண்டவர். அவரிடம் லம்போகினி உருஸ், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஸ்கோடா லாரா உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர கார்கள் உள்ளன. கிரிக்கெட் களத்தில் ரன் மழை பொழிவதை போலவே, வருமானத்திலும் ரோஹித் சர்மா ஒரு உண்மையான ஹிட்மேன் ஆக வலம் வருகிறார்.
About the Author
RK Spark