வாஷிங்டன்,
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது கூறி வருகிறார். ஆனால், பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியதில் மூன்றாம் நபரின் தலையீடு இல்லை என்று இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. அதே நேரத்தில், போரை நிறுத்தியதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு பாகிஸ்தான் தரப்பு நன்றி தெரிவித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார். ஆனால், தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என டிரம்ப் ஆதங்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும், நோபல் பரிசு பெறும் தனது விருப்பத்தை டிரம்ப் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது:
“சர்வதேச அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு நமது மதிப்பு உயர்ந்துள்ளது. அமைதி ஒப்பந்தங்களை நாம் ஏற்படுத்தி வருகிறோம். போர்களை நிறுத்தி வருகிறோம். இந்தியா – பாகிஸ்தான், தாய்லாந்து – கம்போடியா உள்பட 7 போர்களை நான் நிறுத்தியிருக்கிறேன். இதற்காக நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.