ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? – சு.வெங்கடேசன் கேள்வி

மதுரை: “ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு போய்ச் சேருமா? அதற்கு என்ன உத்தரவாதம்?. கார்ப்பரேட் வரிகளை உயர்த்தி மாநில அரசுகளுக்கு இழப்பீடு தருவீர்களா?” என பிரதமருக்கு மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “நவராத்திரி துவக்க நாளில் ஜிஎஸ்டி சலுகை அமலாகிறது என மகிழ்ச்சியை பகிர்ந்தீர்களே, 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி கொடுமையால் மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?

ஊடகங்களை எப்போதுமே சந்திக்க மறுக்கிற பிரதமர் தொலைக்காட்சியில் வழக்கம் போல ஒருவழி உரையில், ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் பெண்கள் விவசாயிகள் நடுத்தர வர்க்கத்தினர் பயன் பெறுவார்கள்..ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சி அடையும் எனப் பிரதமர் பேசியுள்ளார்.

இருக்கட்டும் பிரதமரே. இத்தனை ஆண்டுகளாக யார் விவசாயிகளை, பெண்களை, நடுத்தர வர்க்கத்தை வறுத்து எடுத்தது?. யார் குடும்பங்களின் மகிழ்ச்சியை குலைத்தது?.

நவராத்திரி துவக்க நாளில் ஜிஎஸ்டி சலுகை அமலாகிறதாம். 8 ஆண்டுகளாக நீங்களே வறுத்து நீங்களே குலைத்து தூக்கத்தை கெடுத்து எத்தனை இரவுகளை சிவராத்திரிக்கள் ஆக்கினீர்கள். அதற்கெல்லாம் மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?

இப்பவும் வசூல் செய்கிற மொத்த ஜி. எஸ்.டி இல் நீங்கள் கொடுத்திருக்கிற சலுகை எத்தனை சதவீதம்? இத்தனை ஆண்டுகள் மக்களிடம் “கொள்ளை” அடித்து விட்டு இப்போது தரும் அற்ப சலுகைக்கு இவ்வளவு ஆரவாரமா?

இந்த சலுகை மக்களுக்கு போய்ச் சேருமா? அதற்கு என்ன உத்தரவாதம்? உங்க கார்ப்பரேட் நண்பர்கள் விடுவார்களா? உங்கள் கைகளில் கார்ப்பரேட் வரி விதிப்பு அதிகாரம் உள்ளதே. கார்ப்பரேட் வரிகளை உயர்த்தி மாநில அரசுகளுக்கு இழப்பீடு தருவீர்களா? மாநில அரசுகள் நிறைவேற்றி வரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதிபாதிப்பு வராமல் உறுதி செய்வீர்களா?” என்று வினவியுள்ளார்.

முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். அவர்கள் விரும்பியதை வாங்கலாம். ஜிஎஸ்டி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும். ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும்.” என்று கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.