ஜிஎஸ்டி சீர் திருத்தம் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று அமலாகும் நிலையில் பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ‘ஜி.எஸ்.டி. சேமிப்பு திருவிழா’ தொடங்குகிறது. நாட்டு மக்களாகிய நீங்கள் இன்னும் எளிதாக பொருட்களை வாங்க முடியும். ஏழைகள், நடுத்தர மக்கள், புதிய நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்கள் இதனால் பயனடைவார்கள். இந்த பண்டிகை காலத்தில் அனைவரின் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த ‘ஜி.எஸ்.டி. சேமிப்பு திருவிழா’ மகிழ்ச்சியை கொண்டு வரும். வருமான வரி விலக்கு மற்றும் ஜி.எஸ்.டி. குறைப்பால் மக்களுக்கு ரூ.2½ லட்சம் கோடி சேமிப்பாக கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், அடுத்த தலைமுறையினருக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் செழிப்பு, வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். நவராத்திரி தொடங்கும் நாளில் மக்களுக்கு கொண்டாட மேலும் ஒரு காரணம் கிடைத்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் பூஜ்ஜியம் அல்லது 5 சதவீத வரி விகிதத்திற்குள் வந்திருப்பது இல்லங்களில் புன்னகையை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.

இட்டாநகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி ‘பச்சத் உத்சவ்’ தொடங்கியுள்ளது. பண்டிகைக் காலத்தில், மக்களுக்கு இரட்டைப் பரிசு கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சமையலறை பட்ஜெட்டைக் குறைக்கும், இது பெண்களுக்கு உதவும் என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.