நியூயார்க்,
ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், தொடர் தாக்குதலால் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையேயான மோதல் பற்றி ஆலோசிக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைப்பின் தலைமையகத்தில் உறுப்பு நாடுகளின் கூட்டம் நடந்தது. இதில் ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடந்து வரும் மோதல் பல தலைமுறைகளாக தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து வருகிறது என்றார். அதனால், இரு நாடுகள் என்பதே தீர்வாக இருக்கும் என்றும் பாலஸ்தீன நாடு என்பது ஒரு வகை உரிமை. அது பரிசு அல்ல என்றும் 2 நாடுகள் இன்றி, மத்திய கிழக்கில் அமைதி என்பது ஏற்படாது என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து, பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரத்திற்கு பிரான்ஸ் நாடு முறைப்படி ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால், கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை தொடர்ந்து பிரான்சும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து போர் தொடுத்து வரும் சூழலில், சர்வதேச நெருக்கடியை அதிகரிக்கும் வகையில், இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
ஐ.நா.வில் நடந்த இரு நாடுகள் தீர்மானம் தொடர்புடைய மாநாட்டில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பேசும்போது, இந்த தருணம் வந்து விட்டது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே அமைதி ஏற்படுவதற்கு, மத்திய கிழக்கிற்கான எங்களுடைய உள்ளார்ந்த வரலாற்று ஈடுபாடு இதுவே ஆகும்.
அதனாலேயே, அதற்கான ஆதரவை நான் அறிவித்து உள்ளேன். பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கிறது என்று கூறியுள்ளார். இஸ்ரேல் அமைதியாக வாழ்வதற்கு அனுமதி அளிக்கும் ஒரே தீர்வாக இருக்கும். இது ஹமாஸ் அமைப்புக்கான தோல்வியாகும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீன மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதனால், அது, இஸ்ரேல் மக்களின் உரிமைகள் எதனையும் பறித்து விடாது என்றும் அவர் கூறினார்.
ஐ.நா. அமைப்பு பாலஸ்தீன தனி நாடுக்கான முன்மொழிவை கொண்டு வந்தபோது, கனடா முதலில், இதற்கான ஆதரவை அறிவித்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் அடுத்து இங்கிலாந்தும் அதற்கான ஆதரவை வெளிப்படுத்தின.
பாலஸ்தீனத்திற்கு 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகாரம் அளித்து விட்டன. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ஜி7 மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளன.