வாஷிங்டன்,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்க அரசு 25 சதவீதம் கூடுதல் வரியை அபராதமாக விதித்துள்ளது. இதன் மூலம் இந்தியா மீது அமெரிக்கா விதித்த மொத்த வரிகள் 50 சதவீதமாக உயர்ந்துள்ளன. அமெரிக்கா விதித்த வரி நியாயமற்றது என இந்தியா கூறியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அரசுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியுஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் வர்த்தக துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் உள்ளிட்ட துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர்.
அங்கு அமெரிக்க அரசின் வர்த்தக துறை மந்திரியுடன் பியுஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சாராத விவகாரங்கள் குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு பியுஷ் கோயல் மற்றும் குழுவினர் இந்த வார இறுதியில் இந்தியா திரும்ப உள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி சுமார் 18 சதவீதமாகவும், இறக்குமதி 6.22 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.