India National Cricket Team: இந்திய அணி தற்போது டெஸ்ட், ஓடிஐ, டி20ஐ என மூன்று பார்மட்டிலும் சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. ஓடிஐ மற்றும் டி20ஐ தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்திலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலும் நீடிக்கிறது.
Add Zee News as a Preferred Source
தற்போது டி20ஐ வடிவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. விளையாடிய 4 போட்டிகளிலும் எவ்வித அழுத்தமும் இன்றி வெற்றியை பதிவு செய்து, சாம்பியன் அணியாக வலம் வருகிறது. அடுத்து, உள்நாட்டில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதால் அதில் வெற்றி பெற்றாலே இந்திய அணி WTC புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களுக்கு முன்னேறும். டெஸ்டில் முன்னணி வீரர்களின் ஓய்வை தொடர்ந்து தற்போது இந்திய அணி மொத்தமாக மாறிவருவதும் நாம் கவனிக்கத்தக்கது.
Team India: ஓடிஐ அணியில் வரும் மாற்றம்
இந்திய அணி கடைசியாக விளையாடிய ஓடிஐ போட்டி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிதான், அத்தொடரையும் இந்தியா கைப்பற்றியது. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களின் மண்ணில் 3 ஓடிஐ மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் 3 ஓடிஐ போட்டிகளையும் இந்தியா விளையாட உள்ளது. 2027 ஐசிசி உலகக் கோப்பையை குறிவைத்து இந்திய அணி ஓடிஐ அணியை கட்டமைக்க நினைக்கும். கடந்த முறை 2023 ஐசிசி உலகக் கோப்பையையே இறுதிப்போட்டி வரை வந்தும் கைப்பற்ற முடியாததால், 2027 ஆண்டிலும் தவறவிடக்கூடாது என்ற வைராக்கியம் இந்திய அணிக்கு இருக்கிறது.
Team India: ஓடிஐயில் அபிஷேக் சர்மா
தற்போதைய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு அதுவே கடைசி மற்றும் முக்கியமான தொடராக கூட அமைய வாய்ப்புள்ளது. எனவே இப்போது இருந்த ஓடிஐயில் சிறந்த வீரர்களை கொண்டு அணியை கட்டமைக்க பல பிளான்களை இந்தியா செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது டி20ஐ போட்டிகளில் அமர்களப்படுத்தும் அபிஷேக் சர்மாவை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐ தொடரில் களமிறக்க தேர்வாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Team India: ஜெய்ஸ்வாலுக்கு ஆப்பு?
தற்போது இந்திய ஓடிஐ அணியின் ஓப்பனர்களாக ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு பேக்-அப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பார்க்கப்பட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலேயே ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது பெரியளவில் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது டி20ஐ வைத்து ஓடிஐ போட்டிகளிலும் அபிஷேக் சர்மாவை கொண்டுவர நினைத்தால் நிச்சயம் ஜெய்ஸ்வாலுக்கு பின்னடைவு எனலாம். மேலும், 2027ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடர் வரை ரோஹித் சர்மா விளையாடுவாரா என்ற கேள்வியும் அனைவரிடத்திலும் இருக்கிறது.
Team India: யஷஸ்வி ஜெய்ஸ்வால் vs அபிஷேக் சர்மா
ஒருவேளை, வரும் ஆஸ்திரேலிய தொடருடன் ரோஹித் சர்மா ஓடிஐ தொடரிலும் இருந்தும் ஓய்வு பெற்றால் அந்த இடத்தை ஜெய்ஸ்வாலை விட அபிஷேக் சர்மா பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. சுப்மான் கில் ஒரு பக்கம் நிதானம் காட்டினார் என்றால் மறுபக்கம் அதிரடி காட்ட பெரிய ஹிட்டிங் வைத்துள்ள அபிஷேக் பேரூதவியாக இருப்பார். ஜெய்ஸ்வாலும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடியவர் என்றாலும் அவர் சமீபத்திய பார்மின் அடிப்படையில் அபிஷேக் சர்மாவுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் அபிஷேக் சர்மா இடம்பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
அபிஷேக் சர்மா இதுவரை இந்திய அணியின் டி20ஐ போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார், அவர் இன்னும் ஓடிஐயில் அறிமுகமாகவில்லை. ஜெய்ஸ்வால் டி20ஐ, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், இதுவரை ஒரே ஒரு ஓடிஐ போட்டியில் மட்டுமே விளையாடியிருக்கிறார்.