திருமணமாகி 5 மாதம் ஆகிறது.. உறவுக்கு மறுத்த கணவர்; ரூ.2 கோடி கேட்டு மிரட்டும் புதுப்பெண்

பெங்களூரு,

திருமணமாகி 5 மாதங்கள் ஆகியும் தாம்பத்தியத்தில் ஈடுபடாததால் ரூ.2 கோடி சொத்து கேட்டு புதுப்பெண் மிரட்டுவதாக போலீசில் கணவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெங்களூரு கோவிந்தராஜ் நகரில் பிரவீன்- சந்தனா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு கடந்த மே மாதம் 5-ந்தேதி தான் திருமணம் நடந்தது. முதலிரவு மற்றும் அடுத்தடுத்த நாட்களிலும் பிரவீன், தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தனா, தனது கணவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் பிரவீன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் மன அழுத்தம் காரணமாக தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்துள்ளார். இதனால் டாக்டர் தாம்பத்தியத்தில் ஈடுபடும்படி பிரவீனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இருப்பினும் பிரவீன், மனைவி சந்தனாவுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சந்தனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து பிரவீனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவீன் கோவிந்தராஜ் நகர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

சந்தனா என்னை ஆண் அல்ல. திருநங்கை என கூறி அவதூறான தகவலை பரப்பினார். மேலும் சந்தனா தனது உறவினர்களை வீட்டுக்கு வரவழைத்து என்னை தாக்கினார். கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர். அப்போது ரூ.2 கோடி சொத்தை சந்தனாவுக்கு எழுதி கொடுக்கும்படி கூறினர். சந்தனாவும் என்னிடம் சொத்து கேட்டு மிரட்டுகிறார்.

ஆனால் நான் கால அவகாசம் கேட்டேன். அதன்பிறகு ஆகஸ்டு 17-ந்தேதி சந்தனாவும், அவரது உறவினர்களும் என்னுடன் தகராறு செய்து என்னை தாக்கினர். அத்துடன் வீட்டில் இருந்த எனது பொருட்களை வீட்டில் இருந்து வெளியே அள்ளிப்போட்டதுடன் என்னையும் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.

எனது தொழில்முறை வாழ்க்கையின் அழுத்தத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை என கூறினாலும், சந்தனா என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார். அவரது குடும்பத்தினர், உறவினர்களும் என்னை தாக்கினர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.