லடாக் போராட்ட களத்தில் ஜென் ஸீ இளைஞர்களும் பின்னணியும் – யார் இந்த சோனம் வாங்சுக்?

காலங்காலமாக மக்கள் தங்கள் உரிமைகளை மீட்க மற்றும் நிலைநாட்ட, நீதி கேட்க, அடக்குமுறையை எதிர்க்க, சுதந்திரம் பெற என எல்லாவற்றிற்கும் போராட்டங்கள்தான் பதிலும், பலனும் கொடுத்துள்ளன என்பது உலக வரலாறு. சமீப ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளும் பல போராட்டங்களைக் கண்டுவருகின்றன. அதில் பலவும் வன்முறைப் போராட்டங்களாக மாறிவிடுகின்றன என்பதுதான் வேதனை.

போராட்டக் களங்களின் நாயகர்களாக இப்போதெல்லாம் பெரும்பாலும் இளைஞர்கள் இருக்கின்றனர். அதுவும், அண்மையில் நேபாளத்தில் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாயிருந்தனர் ஜென் ஸீ இளைஞர்கள். தற்போது, அதே பாணியில் நம் நாட்டில் லடாக்கில் ஒரு போராட்டம் வெடித்துள்ளது. யூனியன் பிரதேசமான லடாக்கில் போராட்டம் நடந்தது ஏன்? அது வன்முறையாக வெடித்ததற்குக் காரணம் என்ன?. லடாக்வாசிகளின் கோரிக்கைதான் என்ன என்பன பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

2019-க்குப் பின்னர்… – கடந்த 2019-ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் லடாக் யூனியன் பிரதேசமாக உருவானது. ஆனால், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ளது போல் அங்கு சட்டப்பேரவை கிடையாது.

ஆரம்பத்தில் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேச அந்தஸ்தை லடாக் மக்கள் பரவலாக ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், காலம் செல்லச் செல்ல லடாக், லெஃப்டினண்ட் கவர்னர் ஆட்சியின் கீழ் இருப்பதால், அங்கே ஓர் அரசியல் வெற்றிடம் இருப்பதாக அவர்கள் உணர்ந்தனர். நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் உள்ளூர் பிரச்சினைகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இந்தச் சூழலில்தான் கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்து, உமர் அப்துல்லா முதல்வரானார். இதனால், லடாக்குக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற வேட்கை அங்கே இன்னும் அதிகமானது. இதுவே மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டத்தைத் தொடங்க உத்வேகமாக அமைந்தது என்றும் கூறலாம்.

போராட்டத்தால் இணைந்த கைகள் – லடாக்கை பொறுத்தவரை மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக முதன்முறையாக புத்த மதம் பெரும்பான்மை கொண்ட லே பகுதியினரும், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை கொண்ட கார்கில் பகுதியினரும் கைகோத்துள்ளனர். ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்பும், ‘கார்கில் டெமாக்ரடிக் அலயன்ஸ்’ என்ற அமைப்பும் ஒன்றிணைந்து போராடத் தொடங்கியது.

போராட்டக் களம் வலுவானதை அடுத்து, லடாக்கின் கோரிக்கைகளை பரிசீலிக்க மத்திய அரசு ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தது. ஆனால், அந்தக் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் எல்லாமே சம்பிரதாய பேச்சுக்களாகவே தொடர்ந்தன. கடந்த மார்ச் மாதம் லடாக்கில் இருந்து ஒரு பிரதிநிதிகள் குழு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தது. ஆனால், உள்ளூர் தலைவர்களின் கோரிக்கையை அமித் ஷா திட்டவட்டமாக நிராகரித்ததாக தகவல்.

அப்போதிலிருந்தே லடாக்கில் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணையில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும், நிலம், கலாச்சாரம் மற்​றும் வளங்களை பாது​காக்​கும் வகை​யில் அரசி​யல் சாசன பாது​காப்​பும் கோரியும் வருகின்றனர். யூனியன் பிரதேசமாக்கப்பட்டதால் உள்ளூர் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை. வேலைவாய்ப்பில் சிக்கல் உள்ளது என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக (செப்.10 முதல்) உண்​ணா​விரதம் மேற்கொண்டு வந்​தார். இந்​நிலை​யில் அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகை​யில் லடாக்​கில் நேற்று முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்​பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்​தது.

செப்.24 என்ன நடந்தது? – நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டம், வன்முறையாக மாறியது. நேற்று லே நகரில் திரண்ட போராட்​டக்​காரர்​கள் அங்​குள்ள லடாக் மலைப்​பகுதி மேம்​பாட்டு தன்​னாட்சி கவுன்​சில் அலு​வல​கம் மற்​றும் பாஜக அலு​வல​கம் மீது தாக்​குதல் நடத்​தினர். மேலும் போலீஸார் மீது கற்​களை வீசிய அவர்​கள், சிஆர்​பிஎப் வேன் உட்பட பல வாகனங்​களுக்கு தீவைத்து எரித்​தனர். இதையடுத்து போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும் கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசி​யும் வன்​முறை​யாளர்​களை விரட்​டினர். இந்தக் கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 22 பேர் போலீஸ்.

இந்தக் கலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம், “செப்.24-ம் தேதி, காலை 11.30 மணியளவில், சோனம் வாங்சுக்கின் ஆத்திரத்தைத் தூண்டும் வகையிலான பேச்சைக் கேட்ட இளைஞர்கள், உண்ணாவிரதப் போராட்டக் களத்திலிருந்து புறப்பட்டு லே அரசு அலுவலகத்தையும், ஓர் அரசியல் கட்சி அலுவலகத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.”என்று தெரிவித்துள்ளது.

யார் இந்த சோனம் வாங்சுக்? – 1966-ல் பிறந்த சோனம் வாங்சுக் ஒரு பொறியாளர். விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் வித்தகர். கல்வி சீர்திருத்தவாதி. சூழலியல் செயற்பாட்டாளர். கடந்த 2009-ம் ஆண்டு ஆமிர் கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் தான் இந்த சோனம் வாங்சுக்.

ஆனால், அது மட்டுமே அவருக்கான புகழ் அடையாளமில்லை. சோனம் வாங்சுக் லடாக்கில் கல்வி முறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த Students’ Educational and Cultural Movement (SECMOL) என்ற அமைப்பை தொடங்கினார். அந்தக் கல்வி முறை லடாக்கின் கலாச்சார, சுற்றுச்சூழல் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் குரல் கொடுத்து வந்தார். ஏட்டுக் கல்வியோடு நிறுத்தாமல் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரது இலக்கு.

சோனம் வாங்சுக்

1993 முதல் 2005 வரை வாங்சுக், ‘லடாக்ஸ் மெக்லாங்’ என்ற அச்சு இதழின் ஆசிரியராக இருந்தார். இவரது அறிவியல் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது, லடாக் மக்களுக்காக மைனஸ் 15 டிகிரி குளிரையும் தாக்குப்பிடிக்கும் வகையிலான களிமண் வீடுகளை உருவாக்கியது.

2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் இந்தியா மோதலில் ஈடுபட்டபோது, ‘எல்லையில் வீரர்கள் சண்டை போடட்டும். நாம் சீனப் பொருட்களை வாங்காமல் ‘வாலட் பவர்’ (Wallet Power) காட்டுவோம்’ என்று முழங்கியவர்.

2024 மார்ச் மாதம் வாங்சுக், லடாக் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து 2024 செப்டம்பரில் வாங்சுக், லே முதல் டெல்லி வரை டெல்லி சலோ பாதயாத்திரை என்ற பெயரில் மாநில அந்தஸ்துக்கான பாதயாத்திரையை மேற்கொண்டார். ஆனால் அவரை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி, தடுப்புக் காவலில் எடுத்தது காவல்துறை. அக்டோபர் 2, 2024-ல் அவர் விடுவிக்கப்பட்டார்.

அதன்பின்னர், லடாக் மாநில அந்தஸ்துக்கான அவரது குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. யூனியன் பிரதேசமாக இருப்பதால், அதற்கு போதிய சுயாதீன சக்திகள் இல்லை. லடாக் கலாச்சார, சூழலியல் அடையாளத்தை பாதுகாக்க வலுவான சட்டப்பேரவை வேண்டும். அதில், உள்ளூர்வாசிகளின் குரல்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று தொடர்ந்து முழங்கி வருகிறார் வாங்சுக்.

திடீரென போராட்டம் வெடிக்கக் காரணம் என்ன? – இந்நிலையில் நேற்று சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் அவருடன் உண்ணாவிரதம் இருந்த 15 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களில் இருவரின் உடல்நிலை மோசமானது. இதனையடுத்து ‘லே அபெக்ஸ் பாடி’-யின் இளைஞர்கள் பிரிவு பந்த்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த இளைஞர்கள் பிரிவுதான் 2023 – 2024 காலக்கட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அக்டோபர் 6-ம் தேதியை நிர்ணயித்தது. போராட்டக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்து உடல்நிலை குன்றி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கான தேதியை தன்னிச்சையாக அதுவும் பல நாட்கள் கடந்து அக்.6 என்று நிர்ணயிக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதான் நேற்று இளைஞர்கள் வெடித்து எழக் காரணம் என்று கூறப்படுகிறது.

வாங்சுக் எதிர்வினை என்ன?- வன்முறைப் போராட்டங்கள் வெடித்த நிலையில் வாங்சுக்,“நமது உண்ணாவிரதப் போராட்டம் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில் வன்முறைகள் வெடித்துள்ளது வேதனையளிக்கிறது. இது ஜென் ஸீ புரட்சி. அவர்கள் ஐந்தாண்டுகளாக வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்கள் வெடிக்க வேலைவாய்ப்பின்மை தான் புதிய காரணியாக இருந்து வருகிறது. ஜனநாயக வழியில் தீர்வு கிட்டாத்தால் தீவிரப் போராட்டங்கள் நடக்கின்றன.

நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக லடாக் மாநில அந்தஸ்துக்காகப் போராடுகிறேன். போராட்டம், பேரணி தான் நமது பாதை. வன்முறை நம் கொள்கையை நீர்த்துப் போகச் செய்யும். இளைஞர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். மாறாக அமைதியாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். நாம் போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கிறோம். டெல்லி வரை நடந்துவிட்டோம். ஆனாலும் இதுவரை நம் குரல் அரசுக்குக் கேட்கவே இல்லை.

2020-ல் பாஜக லடாக் மக்களுக்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இப்போது, யு-டர்ன் எடுத்து எதுவுமே செய்யவில்லை. பல ஆண்டுகளாக இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். ஐந்து ஆண்டுகளாக காந்திய வழியில் போராடினோம். இந்த வன்முறை சற்றும் எதிர்பாராதது. அதுவாகவே தன்னெழுச்சியாக நடந்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பின்னர் அரசியல் கட்சிகள் இருப்பதாகக் கூறுவது தவறு ” என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: ஆனால், காங்கிரஸ் கட்சி இந்தப் போராட்டத்தின், வன்முறையின் பின்னணியில் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் அமித் மாள்வியா குற்றஞ்சாட்டியுள்ளார். போராட்டக் களத்தில் லே மேல்சபை உறுப்பினர் ஒருவர், வன்முறையில் ஈடுபட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ க்ளிப்பிங்கை பகிர்ந்து, அந்த நபர் காங்கிரஸ் கட்சிக்காரர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அண்மையில் ராகுல் காந்தி, ‘ஜென் ஸீ இளைஞர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள்’ என்று கூறியதையும் நினைவுகூர்ந்து, ‘ராகுல் தூண்டியது வன்முறையாக வெடித்துள்ளது’ என்றும் விமர்சித்துள்ளார்.

அடுத்தது என்ன? – வன்முறைப் போராட்டங்களால் லே. லடாக்கில் பதற்றம் நிலவிய நிலையில், தற்போது அங்கே இயல்பு நிலை திரும்பியுள்ளதாக லடாக் லெஃப்டினண்ட் கவர்னர் கவீந்தர் குப்தா தெரிவித்துள்ளார். நேற்றைய போராட்டங்களின் பின்னணியில் சதி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கவீந்தர் முன்னாள் பாஜக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டங்கள் பற்றி காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், “லடாக்குக்கு மாநில அந்தஸ்து தருவதாக எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் வஞ்சிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். நாங்கள் பல ஆண்டுகளாக ஜனநாயக ரீதியாக, அமைதி வழியில், பொறுப்புணர்வோடு மாநில அந்தஸ்துக்காக போராடி வருகிறோம். அப்படியென்றால் நாங்கள் எவ்வளவு தூரம் வஞ்சிக்கப்பட்டுள்ளோம், ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வரும் அக்.6-ம் தேதி மத்திய அரசு, லடாக் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க உயர்நிலைக் கூட்டத்தைக் கூட்டுகிறது. கூடவே இன்றும், நாளையும் லடாக் தலைவர்களுடனான ஆலோசனைக்கும் திட்டமிட்டுள்ளது. அடுத்தடுத்த நகர்வுகள் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைக்கும் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.