India vs Sri Lanka : 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மோதல், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத த்ரில்லர் போட்டியாக அமைந்தது. இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றிருந்த இந்திய அணிக்கு, இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயமாக இருந்தாலும், இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், போட்டி சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் வரை நீடித்தது.
Add Zee News as a Preferred Source
இந்தியாவின் இமாலய இலக்கு – 202 ரன்கள்
முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடியைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, தனது சிறப்பான ஃபார்மைத் தொடர்ந்தார். அவர், வெறும் 31 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான அடித்தளமிட்டார். அவருக்குத் துணையாக, திலக் வர்மா நிலைத்து நின்று ஆடி, ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து, ஸ்கோரை உயர்த்த உதவினார். பின் வரிசையில் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களின் பங்களிப்புடன், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது. இது இந்த ஆசிய கோப்பை தொடரின் அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்தது.
இலங்கையின் பதிலடியில் ஆட்டம் சமன்
203 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், யாரும் எதிர்பாராத வகையில் இந்திய பந்துவீச்சாளர்களுக்குக் கடுமையான சவால் அளித்தனர். நட்சத்திர ஆட்டக்காரர் பதும் நிசங்கா அற்புதமாக விளையாடி, 52 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்தார். 108 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை இழ்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குசால் பெரேரா, வெறும் 32 பந்துகளில் 58 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.
ஒரு கட்டத்தில், இலங்கை அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால், இறுதி ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தை அதிகரிக்க, இலங்கை அணி விக்கெட்டுகளைத் தவறவிட்டது. கேப்டன் தசுன் ஷனாகா கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடினாலும், ஹர்ஷித் ராணா வீசிய இறுதி ஓவரில், இலங்கை அணிக்கு வெற்றிக்குத் தேவையான ரன்கள் கிடைக்காமல் போகவே, இரு அணிகளும் 202 ரன்கள் எடுத்து சமநிலையில் முடிந்தது. மொத்த 40 ஓவர்கள் கொண்ட ஆட்டம் சமன் செய்யப்பட்டதால், வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவர்: அர்ஷ்தீப் மற்றும் சூர்யகுமார் மேஜிக்
சூப்பர் ஓவரில், இந்திய அணிக்காக அர்ஷ்தீப் சிங் பந்து வீசினார். அபாரமாக வீசி, இலங்கை பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் திணறடித்தார். இலங்கை அணியின் குசால் பெரேராவை முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்து அவர் அதிர்ச்சி அளித்தார். அவர் தொடர்ந்து துல்லியமாகப் பந்து வீச, இலங்கை அணியால் ரன் சேர்க்க முடியவில்லை. அர்ஷ்தீப் சிங் வெறும் 0.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணியை வெறும் 2 ரன்களில் கட்டுப்படுத்தினார்.
இதையடுத்து, வெற்றிக்கு 3 ரன்கள் என்ற மிக எளிய இலக்குடன் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் களமிறங்கினார். இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா முதல் பந்தை வீசினார். சூர்யகுமார் யாதவ், எதிர்கொண்ட முதல் பந்தையே ஆப்சைடில் விரட்டி அடிக்க, மூன்று ரன்கள் ஓடி எடுக்கப்பட்டது. அத்துடனட் ஆசியக் கோப்பையில் இந்திய அணி ஒரு த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
About the Author
S.Karthikeyan