விஜய்யின் நாமக்கல், கரூர் பிரச்சாரம்: நேரம், மக்கள் சந்திப்பு நிகழ்விடம் அறிவிப்பு

சென்னை: தவெக தலைவர் விஜய் நாளை (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ள நிலையில், அந்தப் பிரச்சாரங்கள் எந்த இடத்தில் நடைபெறும், எந்த நேரத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (27.09.2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. நாமக்கல்லில் கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கும், கரூரில், வேலுச்சாமிபுரம் பகுதியில், நண்பகல் 12.00 மணிக்கும் நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர் குழுக்கள் விவரமும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் மக்கள் சந்திப்புக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திருச்சியில் கூட்டம் பெருமளவில் திரண்டதால் அரியலூர் பிரச்சாரத்துக்குப் பின்னர் பெரம்பலூரில் அவரால் மக்களை சந்திக்க இயலவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.20) அன்று நாகப்பட்டினம், திருவாரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

விஜய் தமிழக சுற்றுப்பயணத்தைத் தொடங்கி 4 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டார். அவருக்கான கூட்டம் குறைவில்லாமல் இருப்பது கவனம் பெற்றுள்ளது. அதேவேளையில் அவரது பேச்சு மீது அரசியல் கட்சிகள் பலவும் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன.

அதனால் தவெக தொண்டர்கள் பலரும் கரூர், நாமக்கல்லில் அவரின் பேச்சின் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.