வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“பன்முகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும்போது, பிரிக்ஸ் அமைப்பு, பகுத்தறிவு மற்றும் ஆக்கபூர்வமான மாற்றத்திற்கான வலுவான குரலாக உறுதியாக நிற்கிறது. அமைதி கட்டமைத்தல், உரையாடல், ராஜதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பது ஆகியவற்றின் செய்தியை பிரிக்ஸ் நாடுகள் வலுப்படுத்த வேண்டும்.
அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம், வரி ஏற்ற இறக்கங்கள் மற்றும் தடைகள் ஆகியவை வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கும்போது, பிரிக்ஸ் நாடுகள் பலதரப்பு வர்த்தக முறையை பாதுகாக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.