பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி

குவாங் டிரை,

வியட்நாமில் புவலாய் புயல் தாக்கம் கடுமையாக இருக்கும் என நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

புயலால் மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறப்பட்டது. கனமழை பெய்து, அதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை புயல் கரையை கடந்தது. அப்போது, 26 அடி உயரத்திற்கு கடல் அலை எழுந்தது. புவலாய் புயலால், கனமழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடானது. வீடுகள், கட்டிடங்களை சுற்றி நீர் தேங்கி ஏரி போல் காட்சியளித்தது.

இதனை அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியும் தெரிவிக்கின்றது. தற்காலிக பாலங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. காணாமல் போன 17 மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. நின் பின் மாகாணத்தில், ஹூ நகரம், தான் ஹோவா நகரங்களில் பலத்த காற்று வீசியதில், வீடுகள் சேதமடைந்தன.

நேற்றிரவுக்கு பின்பு, புயலால் 3.47 லட்சம் வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் காலதாமதத்துடனும் இயக்கப்பட்டன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டன. வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்து சென்றன. 1,400 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். புயலால், மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியானார்கள். இந்நிலையில், புயல் வலுவிழந்து, லாவோஸ் நோக்கி செல்கிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.