கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை முதன்முறையாக தவெக கரூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கரூரில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஏற்கெனவே, உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை கரூர் மாவட்ட நிர்வாகிகள் சேகரித்து, அந்தப் பட்டியலை தமிழக வெற்றி கழகத்தின் தலைமைக்கு அனுப்பி வைத்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களை விஜய் உத்தரவின் பேரில் தவெகவினர் நேரில் சந்தித்து வருகின்றனர்.
மேலும், விரைவில் கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருப்பதாகவும், உரிய உதவிகள் செய்து தருவதாக உறுதி அளித்து வருகின்றனர். இந்த சந்திப்புகளின்போது தவெக மேற்கு மண்டலச் செயலாளர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கரூர் துயரக்குப் பின்னால்… – கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ல் நடந்த தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். ஆனால், அன்று இரவே திருச்சி வந்த விஜய், தனி விமானம் மூலம் உடனடியாக சென்னை திரும்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சென்னை வந்த சில மணி நேரங்களில் அவர் ஓர் இரங்கல் ட்வீட்டை வெளியிட்டார். அதில் விஜய், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.
கண்களும், மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. என் சொந்தங்களே, நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில், இந்த பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடுசெய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பை தாங்கவே இயலாது. இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.20 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.2 லட்சமும் அளிக்க எண்ணுகிறேன்.
இழப்புக்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். ஆனாலும், இந்த நேரத்தில், எனது உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தை சேர்ந்தவனாக என் கடமை. அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் தவெக உறுதியாக செய்யும். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.” என்று தெரிவித்திருந்தார்.
‘களத்தில் காணோமே’ – விஜய்யின் ட்வீட் வெளியான நிலையில், விஜய் கரூர் வந்தால் நிலைமை சிக்கலாகலாம், ஆனால் இரண்டாம் நிலை தலைவர்கள் கூடவா வர இயலாது. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் எங்கே எனக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துவந்தன. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை விஜய் உத்தரவின் பேரில் தவெகவினர் நேரில் சந்தித்து வருகின்றனர். மேலும், விரைவில் கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருப்பதாகவும், உரிய உதவிகள் செய்து தருவதாக உறுதி அளித்து வருகின்றனர்.