திருச்சூர்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் சேவியர். இவர் தனது நண்பர்களுடன் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளிக்கு காரில் சுற்றுலா சென்றார். வனப்பகுதியில் உள்ள அதிரப்பள்ளி-மளுக்கப்பாரா சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென என்ஜின் பழுதாகி கார் நடுவழியில் நின்றது.
இதையடுத்து அவர்கள் காரை சரிசெய்ய பலமுறை முயன்றும் முடியவில்லை. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், சேவியர் தனது நண்பர்களுடன் தவித்து கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதாக அந்த வழியாக வந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் பீதியடைந்த அவர்கள் வேறொரு காரை வரவழைத்து, அதில் அதிரப்பள்ளிக்கு சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று சேவியர் தனது நண்பர்களுடன் மெக்கானிக் ஒருவரை அழைத்து கொண்டு பழுதான காரை சரிசெய்ய சென்றார். அப்போது இரவில் அப்பகுதியில் நடமாடிய காட்டு யானைகள், சாலையில் பழுதாகி நின்றிருந்த காரை தாக்கி சேதப்படுத்தி தலைகுப்புற கவிழ்த்து பந்தாடியது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் உதவியுடன் கார் மீட்கப்பட்டு சாலக்குடிக்கு எடுத்து செல்லப்பட்டது.
காரில் வந்தவர்கள் நடுவழியில் சிக்கியபோது சாமர்த்தியமாக செயல்பட்டு அங்கிருந்து மற்றொரு காரில் சென்றதால் உயிர் தப்பினர். காட்டு யானைகள் காரை தாக்கி, காலால் உதைத்து விளையாடிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.