திருப்பூர் குமரனையும், சுப்பிரமணிய சிவாவையும் நினைவுகூர்ந்து வணங்குவோம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவுகூர்ந்து வணங்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்த நாள் இன்று. இதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவுகூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.

திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார், இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.

இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி பிறந்தவர் திருப்பூர் குமரன். 1932ம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியபோது, தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் தொடங்கியது. அப்போது, தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் திருப்பூரில் நடத்திய போராட்டத்தில் திருப்பூர் குமரன் பங்கேற்றார். 1932, ஜனவரி 10ம் தேதி அவர் கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்கு தலைமை ஏற்று அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டார். இறுதிவரை தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்த அவர், மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 11ம் தேதி உயிரிழந்தார். இதனால், அவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884, அக்டோபர் 4ம் தேதி பிறந்தவர் சுப்ரமணிய சிவா. அரசியலையும் ஆன்மிகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடிய இவர், மிகச்சிறந்த மேடைப் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவர். வ.உ. சிதம்பரம், மகாகவி சுப்ரமணிய பாரதி ஆகியோரோடு நெருங்கிப் பழகிய சுப்ரமணிய சிவா, பலமுறை கைதாகி சிறை தண்டனை அனுபவித்தவர். தொழுநோய் காரணமாக 1925, ஜூலை 23ம் தேதி தனது 40ஆவது வயதில் சுப்ரமணிய சிவா உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.