ஜெய்ப்பூர்,
மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின்போது, பயங்கரவாத ஒழிப்புக்கான நடவடிக்கையில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் பஜ்ரங் சிங்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த கஞ்சா ஒழிப்பு அதிரடி நடவடிக்கையின்போது, சிங் கைது செய்யப்பட்டார். தேச பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அவர், போதை பொருள் கும்பல் தலைவனாக மாறிய அதிர்ச்சியான விசயம் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் இருந்து ராஜஸ்தானுக்கு கஞ்சா கடத்தியதில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 10-ம் வகுப்பு வரையே படித்திருந்தபோதும், 6 அடி உயரத்துடன் இருந்த அவருக்கு பி.எஸ்.எப். படையில் சேர வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, பல்வேறு மாநிலங்களிலும் பணிபுரிந்ததுடன், மாவோயிஸ்டுகள் மற்றும் எல்லையில் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருடைய பணியை கவனித்த அதிகாரிகள், பயங்கரவாத ஒழிப்பு படையான தேசிய பாதுகாப்பு படைக்கு (என்.எஸ்.ஜி.) அவரை தேர்ந்தெடுத்தனர்.
அவர் 7 ஆண்டுகளாக அதில் வீரராக பணியாற்றினார். அப்போது, 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான பணியில் அவர் ஈடுபட்டார். இந்த நிலையில், 2021-ம் ஆண்டு அரசியலில் ஈடுபடுவதற்காக சொந்த ஊருக்கு வந்து அரசியல் கட்சியில் ஒன்றிலும் சேர்ந்துள்ளார்.
அவருடைய மனைவியை கிராம தேர்தலிலும் ஈடுபடுத்தினார். எனினும், அதில் அவருடைய மனைவி தோற்று விட்டார். இதன்பின்னர், போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. ஒரு வருடத்தில், கஞ்சா கும்பல் தலைவனானார்.
இதன்பின்பு சிறிய அளவிலான போதை பொருள் கடத்தலில் எல்லாம் அவர் ஈடுபட ஒப்பு கொள்வதில்லை. குவிண்டால் கணக்கில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டார். கடந்த 2 மாதங்களாக அவரை தேடி வந்த போலீசார், அவருடைய இருப்பிடம் தெரியாமல் அலைந்தனர். இதன்பின்னர், சமையல்காரர் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார். இதனை ஐ.ஜி. விகாஸ் குமார் கூறினார்.