India vs Pakistan : இலங்கை கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், டாஸின் போது நடந்த ஒரு தவறு காரணமாக சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கம்போல், போட்டி தொடங்கும் முன் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் பாகிஸ்தான் அணி கேப்டன் ஃபாத்திமா சனா ஆகியோர் டாஸில் பங்கேற்றனர். ஆசியக் கோப்பையில் நடந்தது போலவே, இரு அணித் தலைவர்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை.
Add Zee News as a Preferred Source
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் டாஸ் நாணயத்தைச் சுண்டி விட்ட பிறகு, பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா, ‘Tails’ (பூ) என்று கேட்டார். ஆனால், அங்கிருந்த ஆஸ்திரேலிய தொகுப்பாளர் மெல் ஜோன்ஸ், ‘Heads’ (தலை) என்று அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) போட்டி நடுவர் (Match Referee) ஷாந்த்ரே ஃபிரிட்ஸ், இந்தத் தவறை கவனிக்காமல், தவறான அழைப்பு இருந்தபோதிலும், டாஸ் வெற்றி பெற்றது பாகிஸ்தான் என்று அறிவித்தார். இதன் விளைவாக, பாகிஸ்தான் அணி டாஸ் வென்று, முதலில் பந்துவீச முடிவு செய்தது.
டாஸிற்குப் பின் அணி கேப்டன்கள் கருத்து
டாஸ் வென்ற பிறகு பேசிய பாகிஸ்தான் அணித் தலைவர் ஃபாத்திமா சனா, “நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம், ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கலாம் என்று தெரிகிறது. எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எங்கள் நம்பிக்கை சிறப்பாக உள்ளது, இன்று சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறோம். 250 ரன்களுக்குள் எடுக்கும் எந்தவொரு இலக்கையும் நாங்கள் சேஸிங் செய்ய முடியும்” என்று கூறினார்.
இந்திய அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசுகையில், “உலகக் கோப்பைக்கு முன் இங்கே ஒரு நல்ல தொடரில் விளையாடினோம். நாங்கள் நேர்மறையாகச் சிந்திக்கிறோம், இன்று சிறப்பாகச் செயல்பட விரும்புகிறோம். ஒரு துரதிர்ஷ்டவசமான மாற்றம் – அமன்ஜோத் விளையாடவில்லை அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்குப் பதிலாக ரேணுகா சிங் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நாங்கள் ஒரு அணியாகச் சிறப்பாக இணைந்துள்ளோம், இன்றைய போட்டிக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
உலகக் கோப்பையில் இந்தியா
இந்தியா, தங்கள் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி தங்கள் முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் மோசமான தோல்வியைச் சந்தித்தது. 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடும் லெவன் அணிகளின் பட்டியல்:
பாகிஸ்தான் மகளிர்: முனீபா அலி, சதாஃப் ஷமாஸ், சித்ரா அமின், ரமீன் ஷமீம், ஆலியா ரியாஸ், சித்ரா நவாஸ் (வி.கீ), ஃபாத்திமா சனா (கேப்டன்), நடாலியா பர்வைஸ், டயானா பைக், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.
இந்திய மகளிர்: பிரத்திகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ரானா, ரேணுகா சிங் தாக்கூர், கிராந்தி கௌட், ஸ்ரீ சரணி.
About the Author
S.Karthikeyan