சிடோர்ஜோ: கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.
இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜோவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டிடம் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர்.
இதனை தொடர்ந்து ஒரு வார காலமாக மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை (அக்டோபர்5) 80% இடிபாடுகளை அகற்றி, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் உடல் பாகங்களை மீட்டதாக பேரிடர் மீட்பு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 50 பேர் இறந்துவிட்டதாகவும், 4 பேரின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளதால் பலி எண்ணிக்கை 54 ஆக உயரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய 13 பேரைத் தேடும் பணி இன்று (அக்டோபர் 6) முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பேரிடர் மீட்பு அமைப்பின் துணை அதிகாரி புடி இரவான் தெரிவித்தார். அல் கோசினி பள்ளியின் அடித்தளத்தால் தாங்க முடியாத அளவுக்கு, மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடந்ததே இடிந்து விழுந்ததற்கான காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா முழுவதும் சுமார் 42,000 இஸ்லாமிய பள்ளி கட்டிடங்கள் உள்ளன என்று அந்நாட்டின் மத விவகார அமைச்சகத்தின் தரவு காட்டுகிறது. அதில் 50 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டிட அனுமதிகள் உள்ளன என்று நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் டோடி ஹாங்கோடோ தெரிவித்தார். விபத்து நடந்த அல் கோசினி பள்ளிக்கு கட்டிட அனுமதி இருந்ததா என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.