இந்தியன் பிரீமியர் லீக்கின் 2026ம் ஆண்டுக்கான தொடர் குறித்து ஒவ்வொரு அணிகளும் இப்போது இருந்தே திட்டமிட தொடங்கி உள்ளனர். சில அணிகள் தங்களது முக்கிய வீரர்களை தக்கவைப்பதில் கவனம் செலுத்த, மற்ற சில அணிகளோ, அணியை முழுமையாக மாற்றி அமைக்கும் நோக்கில், வரவிருக்கும் மெகா ஏலத்தை ஒரு முக்கிய களமாக பார்க்கின்றன. இந்த பின்னணியில் சில சர்வதேச வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றால், அவர்களை எடுக்க அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2026 ஏலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில முக்கிய வீரர்கள் உள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source
அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள்
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளுக்கு சிறப்பான தொடக்கத்தை தந்து, பவர்-பிளே ஓவர்களில் ரன் குவிக்கக்கூடிய வீரர்களுக்கான தேவை எப்போதும் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில், பின்வரும் வீரர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
பென் டக்கெட் (இங்கிலாந்து)
இங்கிலாந்தின் பேஸ்பால் அதிரடி ஆட்டத்தின் பிரதிநிதியான பென் டக்கெட், ஐபிஎல் பவர்-பிளேக்களில் புதிய பரிமாணத்தை அளிக்கும் திறன் கொண்டவர். வேகப்பந்து மற்றும் சுழற்பந்து என இரண்டையும் திறம்பட எதிர்கொள்ளும் இவரது ஆட்டம், பல அணிகளின் தொடக்க வீரர் இடத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். இதுவரை ஐபிஎல் தொடரில் அறிமுகமாகாத நிலையில், இவர் ஏலத்தில் பங்கேற்றால், அதிக கவனம் ஈர்ப்பார்.
டிம் சைஃபர்ட் (நியூசிலாந்து)
சர்வதேச டி20 போட்டிகளில் தனது திறமையை நிரூபித்த வீரர் டிம் சைஃபர்ட். ஐசிசி தரவரிசையில் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் இவர், 142-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன், சுமார் 30 சராசரியை வைத்திருப்பது இவரது நிலைத்தன்மையை காட்டுகிறது. மேலும் இவர் விக்கெட் கீப்பிங் திறனும் கொண்டிருப்பதால், அணிகளுக்கு கூடுதல் பலம் சேர்ப்பார்.
ஜேமி ஸ்மித் (இங்கிலாந்து)
சர்வதேச டி20 போட்டிகளில் 194.02 என்ற அபாரமான ஸ்டிரை ரேட்டைக் கொண்டுள்ள ஜேமி ஸ்மித், ஐபிஎல் தொடரின் வேகமான ஆட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர். ‘தி ஹன்ட்ரட்’ மற்றும் ‘ஐஎல்டி20’ போன்ற உலகெங்கிலும் உள்ள டி20 லீக்குகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு கைகொடுக்கும். விக்கெட் கீப்பராகவும் செயல்படும் திறன் கொண்டிருப்பதால், ஒரு அதிரடி டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இவரை பயன்படுத்திக்கொள்ள அணிகள் விரும்பும்.
கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா)
காயம் காரணமாக 2024ல் விளையாடாத கேமரூன் கிரீன், 202-ல் சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த ஃபார்முடன் திரும்பியுள்ளார். மீண்டும் முழு உடல் தகுதியுடன் பந்துவீச தொடங்கினால், இவர் ஏலத்தில் மிகவும் விரும்பப்படும் வீரராக இருப்பார். அதிரடியாக பேட் செய்யவும், வேகப்பந்து வீசவும் திறன் கொண்டிருப்பதால், ஒரு முழுமையான டி20 வீரராக இவர் பார்க்கப்படுகிறார்.
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
கடைசியாக 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ், மீண்டும் ஏலத்திற்கு வந்தால் அது ஒரு மாபெரும் நிகழ்வாக இருக்கும். உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக திகழும் இவர், பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை படைத்தவர். இவரது தலைமை பண்பும், அனுபவமும் எந்தவொரு அணிக்கும் பெரும் பலமாக அமையும்.
About the Author
RK Spark