கொழும்பு,
இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் குவித்தது. 248 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாட தொடங்கியது.
இந்த போட்டியின் 4-வது ஓவரின் கடைசி பந்து வீசப்பட்டபோது, தொடக்க ஆட்டக்காரரான முனீபாவை எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற்றுவதற்காக நடுவரிடம் இந்திய வீராங்கனைகள் தரப்பில் முறையிடப்பட்டது.
ஆனால், நடுவர் நாட்-அவுட் என கூறினார். இதனால், அனைவரும் அவரவர் பகுதிக்கு திரும்பியபோது, இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வீசிய பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. ஆனால், முனீபா இதனை கவனிக்காமல் இருந்து விட்டார்.
இதுபற்றிய ரீப்ளேவை பார்த்தபோது, அவர் கிரீஸ் லைனை (கோடு) விட்டு வெளியே இருந்தது தெரிய வந்தது. அவர் கிரீசை நோக்கி நடந்து சென்றதும் தெரிந்தது. முனீபாவின் கால்கள் கோட்டை விட்டு வெளியே இருந்தன. பந்து ஸ்டம்ப் மீது பட்டபோது, அவருடைய பேட் தரையில் இல்லை. கால்களும் கிரீஸ் கோட்டுக்கு வெளியே இருந்தன. தொடக்கத்தில், டி.வி. நடுவர் நாட்-அவுட் என கூறினார். எனினும், 2-வது முறையாக அதனை ஆய்வு செய்தபோது, முனீபாவுக்கு அவுட் கொடுக்கப்பட்டது.
முனீபா 2(12) ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். எல்.பி.டபிள்யூ. முறையில் முனீபாவை ஆட்டமிழக்க செய்வதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தபோதும், களத்தில் கிரீஸ் கோட்டுக்குள் இல்லாததற்காக முனீபா ரன் அவுட் முறையில் வெளியேற்றப்பட்டது சர்ச்சையானது. எனினும், விதிகளின்படியே அவர் ஆட்டமிழந்து உள்ளார்.
இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 43 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகியாக இந்திய வீராங்கனை கிரந்த கவுட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.