புதுடெல்லி,
13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் குவித்தது. 248 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடியது.
இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 43 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில், பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், மொத்தமுள்ள 28 லீக் போட்டிகளில் 6 போட்டிகள் விளையாடப்பட்டு உள்ளன. இதில், இந்தியா 2 போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பட்டியலில் ஆஸ்திரேலியா 2-ம் இடத்தில் (3 புள்ளிகள்) உள்ளது.
வங்காளதேசம் 3-ம் இடத்திலும் (2 புள்ளிகள்), இலங்கை 4-ம் இடத்திலும் (1 புள்ளி) உள்ளன. பாகிஸ்தான் 2 போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் தோல்வியடைந்து உள்ளது. இதனால், 6-வது இடத்திற்கு சென்றுள்ளது. நியூசிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு போட்டியில் விளையாடி தோல்வியை தழுவின. அவை முறையே 7 மற்றும் 8 ஆகிய இடங்களில் உள்ளன.