Mohammed Siraj : இந்திய அணி கடைசியாக நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்படவில்லை. இதனால் முகமது சிராஜ் மிகப்பெரிய வருத்தத்தில் இருந்த நிலையில், அந்த சம்பவம் குறித்து 7 மாதங்களுக்குப் பிறகு பேசியுள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனக்கு அனுப்பிய செய்தியை அந்த பேட்டியில் முகமது சிராஜ் வெளியிட்டுள்ளார்.
Add Zee News as a Preferred Source
முகமது சிராஜ் பேசும்போது, “சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து ரோகித் சர்மா முன்பே மெசேஜ் அனுப்பிவிட்டார். அவர் அனுப்பியிருந்த மெசேஜ் என்னவென்றால், துபாயில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கே முன்னுரிமை இருக்கும். உங்களை அங்கு அழைத்துச் சென்று வெறுமனே பெஞ்சில் உட்காருவதை நான் விரும்பவில்லை என்று ரோஹித் தெரிவித்திருந்தார்” என கூறியுள்ளார். மேலும், “குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுங்கள், பயிற்சி செய்யுங்கள், உங்கள் உடற்தகுதியை மேம்படுத்துங்கள்” என்றும் ரோஹித் சர்மா முகமது சிராஜூக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அந்த பேட்டியில் எம்எஸ் தோனி குறித்தும் முகமது சிராஜ் பேசியுள்ளார். முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்.எஸ். தோனி, தான் இந்திய அணியில் நுழைந்தபோது தனக்கு வழங்கிய ஆலோசனை மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார். வெளியாட்கள் தனது ஆட்டத்தைப் பற்றி கூறுவதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று தோனி சிராஜுக்கு எச்சரித்துள்ளார். “யாரையும் நம்ப வேண்டாம். நீங்கள் நன்றாகச் விளையாடும்போது, உலகம் முழுவதும் உங்களுடன் இருக்கும். நீங்கள் மோசமாகச் விளையாடும்போது, இந்த உலகமே உங்களைத் திட்டும்” என்று தோனி கூறியதாக சிராஜ் தெரிவித்தார்.
கிரிக்கெட் விமர்சனங்கள் குறித்து முகமது சிராஜ் பேசும்போது, கிரிக்கெட் ரசிகர்களின் மனநிலை விரைவில் மாறும் தன்மை கொண்டது என கூறியுள்ளார் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினால் ‘சிராஜ் போல் பந்து வீச்சாளர் இல்லை’ என்று கொண்டாடுபவர்கள், அடுத்த போட்டியில் சோபிக்காவிட்டால் உடனே தரக்குறைவாகப் பேசுகிறார்கள் என்றார். இப்போதெல்லாம் வெளியில் இருந்து வரும் விமர்சனங்களையும், கருத்துக்களையும் புறக்கணித்து விட்டதாகவும், தனது அணி வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள் என்பதே தனக்கு முக்கியம் என்றும் முகமது சிராஜ் தெரிவித்தார்.
இந்திய அணியின் டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று விளையாடும் முகமது சிராஜ் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அத்துடன் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்யும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
About the Author
S.Karthikeyan