புதுடெல்லி: நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த சமநிலையான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு விளங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், “மனிதகுல வரலாற்றில் தொழில்நுட்ப வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே முன்னேற்றம் தீர்மானிக்கப்படுகிறது. எனினும், அதன் பாதை எப்போதும் நேரானதாக இருப்பதில்லை. வாக்குறுதிகளும், மீறல்களும் எப்போதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே இருக்கின்றன. அதிகாரமளித்தல் மற்றும் சுரண்டல், ஜனநாயகமாக்கல் மற்றும் ஆதிக்கம், கூட்டாண்மை மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை பயன்பாடுதான் தீர்மானிக்கிறது.
இன்று நாம் மிகப்பெரிய மாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறோம். நாம் தனித்தனியாகவும் கூட்டாகவும் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும். இந்தியாவில், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் மற்றும் சர்வதேச நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஜி20 அமைப்புக்கு தலைமை வகித்தபோது நாங்கள் இதை நிரூபித்தோம்.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு முக்கியம் என்பதை வலுவாக நாங்கள் வலியுறுத்தினோம். அதேநேரேத்தில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு என்பது நம்பிக்கை, பாதுகாப்பு, நியாயம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தினோம்.
செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் நிறுவன உறுப்பினர் என்ற வகையில், பொறுப்பான, உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவை வலியுறுத்தும் புதுடெல்லி பிரகடனங்களை நாங்கள் ஊக்குவித்தோம். பிளெட்ச்லி பார்க், சியோல் ஆகிய நகரங்களில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடுகளில் நாங்கள் பங்கேற்றோம். கடந்த ஆண்டு பாரிஸ் செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டுக்கு இணை தலைமை ஏற்றோம். அடுத்த ஆண்டு நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த உச்சி மாநாடு, இந்த உண்மையான தாக்கத்தை முன்னெடுத்துச் செல்லும்” என தெரிவித்தார்.