மெல்போர்ன்,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதில் ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் புதிய ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் கடந்த ஓராண்டிற்குள் இரண்டு ஐ.சி.சி கோப்பையை கைப்பற்றிய ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு அவரை புதிய கேப்டனாக கில்லை நியமித்ததற்கு ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவும் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டது சரியான ஒன்றுதான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தான் மிகச்சிறந்த கேப்டன் என்பதை சுப்மன் கில் நிரூபித்து காண்பித்தார். அதுமட்டுமின்றி டி20 போட்டிகளுக்கான அணியிடம் துணை கேப்டனாக இருக்கிறார். எனவே என்னை பொறுத்தவரை ஒருநாள் போட்டிகளிலும் அவர் கேப்டனாக இருப்பது இந்திய அணிக்கு நல்லதுதான்.
எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மிகச்சிறப்பாக இருக்கும் என்றும் விராட் கோலி அந்த தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.