இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஷிகார்பூர் மாவட்டத்தில் இருந்து பெஷாவர் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். சுல்தான் கோட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் அந்த ரெயில் தடம் புரண்டு 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் ரெயில் பெட்டிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் ஏராளமான பயணிகள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து தண்டவாளத்தில் இருந்து ரெயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது தண்டவாளத்தின் பெரும்பகுதி சேதமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சி குழு இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது இது முதன்முறை அல்ல. இந்த ஆண்டில் நடத்தப்படும் 6-வது தாக்குதல் இதுவாகும். எனவே பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் சமீபத்திய தாக்குதல் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதம் அரங்கேறியது. அதேபோல் மார்ச் மாதம் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 26 பேர் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.