சபரிமலையில் தங்க கதவை தாமிரம் என்று கூறி வெளியே கொண்டு சென்றது அம்பலம் – பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் மாயமான சம்பவத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் சபரிமலையில் தங்கத் தகடுகள் பதிப்பதற்காக கடந்த 1998-ம் ஆண்டு பெங்களூருவை சோ்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா 30.300 கிலோ தங்கமும், 1900 கிலோ செம்பும் வழங்கினார். கோவிலின் மேற்கூரை, பக்கச் சுவர்களில் சில பகுதிகள், வாசல், நிலை, படிகள் மற்றும் முன்புறமுள்ள துவார பாலகர் சிலைகள் ஆகியவற்றில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன.

இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு துவார பாலகர் சிலைகள், முன்பக்க கதவு, நிலை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளுக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பராமரிப்பு பணி முடிந்த நிலையில் புதிய வாசல், நிலை ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த சிலைகள் பராமரிப்பு பணிக்கு இந்த ஆண்டு சென்னை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் மாயமானது தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு 40 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள வாசல் மற்றும் நிலை ஆகியவை பராமரிப்பு பணிகளுக்காக பெங்களூருவை சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவரிடம் தேவசம் போர்டு வழங்கியது. அப்போது இவை அனைத்தும் தாமிரத்தகடுகள் என்று அப்போதைய சபரிமலை கோவில் நிர்வாக அதிகாரியும், இப்போதைய துணை கமிஷனருமான முராரி பாபு சான்றிதழ் அளித்திருந்தார்.

இந்தநிலையில் சபரிமலையில் புதிய நிலை மற்றும் வாசல் பொருத்தப்பட்டதாகவும், அதில் 4 கிலோ தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் உண்ணி கிருஷ்ணன் போற்றி கூறியுள்ளார். பெங்களூருவில் வைத்து நிலம்பூர் தேக்கை பயன்படுத்தி புதிய வாசலை தயாரித்து அதை ஐதராபாத் கொண்டு சென்று தாமிரத்தகடுகளை பதித்து, பின்னர் சென்னைக்கு கொண்டு வந்து தங்கமுலாம் பூசி சபரிமலைக்கு கொண்டு வந்து அவற்றை பொருத்தியதாக உண்ணிகிருஷ்ணன் போற்றி தெரிவித்து உள்ளார். அப்படி என்றால் சபரிமலையில் இருந்து ஏற்கனவே கொண்டு சென்ற தங்கத் தகடுகள் பதிக்கப் பட்ட வாசலும், நிலையும் எங்கே போனது என்பதில் மர்மம் நிலவுகிறது.

விஜய் மல்லையா அளித்த தங்கத்தால் தான் சபரிமலை கோவிலின் வாசல் மற்றும் நிலை ஆகியவற்றில் தகடுகள் பதிக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதை அப்போது சபரிமலையில் தங்கத்தகடுகள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுவாமிநாதன் என்பவரும் உறுதி செய்துள்ளார். வெறும் 27 வருடங்களில் தங்கத் தகடுகள் தாமிரமாக எப்படி மாறும் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அப்படி இருக்கும் போது இவை தாமிரத்தகடுகள் என்று அப்போதைய நிர்வாக அதிகாரி முராரி பாபு எப்படி சான்றிதழ் கொடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது துணை கமிஷனராக உள்ள முராரி பாபு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.