புதுடெல்லி: ஹரியானா ஐபிஎஸ் அதிகாரியான பூரண் குமார் கடந்த 7-ம் தேதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அம்னீத் பி.குமார், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
பட்டியல் வகுப்பை சேர்ந்த தனக்கு எதிராக மூத்த அதிகாரிகள் 10 பேர் சாதியப் பாகுபாடு காட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை 11 மணியளவில் சண்டிகரில் உள்ள பூரண் குமாரின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறுகையில், “நீங்கள் எவ்வளவு தான் புத்திசாலியாக இருந்தாலும், தலித்தாக இருந்தால், தூக்கி வீசலாம் என்ற தவறான செய்தி அவர்களுக்கு சொல்லப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவரது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது பிரதமர் மோடியும் ஹரியானா முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.