சென்னை: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். பொய்யான தகவலை பேசியுள்ளார் பொய்பாடி பழனிசாமி” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது: இன்றைக்கு எதுவுமே சாதிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி என்கின்ற ஒற்றை அஜென்டாவுடன் இன்றைக்கு சட்டமன்றத்திற்கு வந்து, தோல்வி கண்டு, அதற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பொய்யான பல்வேறு செய்திகளை தந்திருக்கின்றார்.
அதற்கான விளக்கங்களை தரவேண்டியது எங்களுடைய கடமை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். ஏதாவது விஷயத்தில் குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.
திருச்சி, திருவாரூர், நாகை, நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது யாருக்கும் எதுவும் நடக்கவில்லை என்கிறார் எடப்பாடி பழனிசாமி. திருச்சியில் மக்கள் மயக்கமடைந்தார்கள், ஆதாரங்கள் இருக்கின்றன. நாமக்கல்லில் அன்றைக்கு 35 பேர் பாதிக்கப்பட்டனர். நாகப்பட்டினத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டனர். தவெக பிரச்சாரம் நடந்த இடங்களில் எல்லாம் கூட்ட நெரிசலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாதிப்பு எப்படி நடந்தது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்த அரசியல் கட்சி தலைவரும் கூட்டத்துக்கோ, ரோடு ஷோவுக்கோ போனால் 500 மீட்டர் தொலைவுக்கு முன்பே வேனில் எழுந்து நின்று கையைசைத்து மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், விஜய் வரும்போது உள்ளேயே உட்கார்ந்து கொண்டார். அதன்பிறகு லைட்டையும் அணைத்து விட்டார்கள். சினிமா போல லைட்டை போட்டு அணைத்து காட்டினார்கள்.
அதனால் மக்கள் கூட்டம் விஜய்யை பார்க்க முடியாமல் முண்டியடுத்து வந்தார்கள். அதில் மூச்சுத்திணறித்தான் இறந்துள்ளனர். இரவில் துரிதமாக அரசு எடுத்த நடவடிக்கையால் தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களுடையது.
போஸ்ட்மார்ட்த்துக்கு மூன்று டேபிள் தானே போடப்பட்டிருந்து என்று பழனிசாமி கூறுகிறார். போஸ்ட்மார்ட்த்துக்கு மூன்று டேபிள் தான் இருந்தது. ஆனால், மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி பெற்று, 8 டேபிள்கள் அங்கு போடப்பட்டன. யார் வேண்டுமானாலும் அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் – கேட்டுக் கொள்ளலாம்.
அந்த உயிர் இழந்தவர்களின் குடும்பங்களிடம் சென்று கேட்டுக் கொள்ளலாம். ஏறக்குறைய பல மாவட்டங்களில் இருந்து போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, போஸ்ட்மார்ட்டம், மறுநாள் மதியம் வரை ஒரு மணி வரை நடைபெற்றது. பிரேத பரிசோதனை வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களை காப்பாற்றுகிற அரசு குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் அங்கு தண்ணீர் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால், வைக்கப்படவில்லை. மருத்துவமனைக்கு வந்த பிறகு கேட்டால், அங்கு தண்ணீர் இல்லை, உடனே எங்கள் மாநாட்டிற்காக வைக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களை எடுத்து கொடுத்தால் அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார். இரவோடு இரவாக ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா? இப்படி எல்லாம் கேவலமான புத்தியோடு தான் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கின்றார்.
எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய முதல்வரின் சாதனை துணையாக இருக்கும். நீதிமன்ற அனுமதிப்படிதான், தவெக கேட்ட இடம் பரப்புரைக்கு வழங்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள் விளக்கம் கொடுத்ததில் என்ன தவறு. அவரால் எதிலும் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறையினர் 500 பேரும், ஊர்க்காவல் படையினர் 160 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதாவது 660 பேர் பணியில் இருந்தனர். கரூர் சம்பவத்தில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை காவல்துறை எடுக்கும்.
டிஜிபிக்கு பதிலாக ஏடிஜிபி சென்று இருக்கிறார் என்று சொல்கிறார். அன்றைக்கு அந்த கூட்டத்தில் இருந்ததால், உடனடியாக ஏடிஜிபி சென்று விசாரணை நடத்தினார். அதில் என்ன தவறு இருக்கிறது. காவல் அதிகாரிகள் யார் வேண்டுமானாலும் சென்று விசாரணை செய்யலாம் – அதன்படி சென்று நடவடிக்கை எடுத்தார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.