கரூர்: தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதால் தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு வழங்க மறுத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் அவர்களை விடுவித்து உத்தரவிட்டார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த வி.பி.மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கிராமத்தில் உள்ள கட்சி நிர்வாகி வீட்டில் தனிப்படையினர் செப். 29-ம் தேதி கைது செய்தனர். இருவரிடமும் கரூர் நகர காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸார் விடிய, விடிய விசாரணை நடத்திய நிலையில் செப். 30ம் தேதி நீதிமன்றத்தில் இரு வரையும் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனு அக். 8-ம் தேதி நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் தள்ளுபடி செய்வதாகக்கூறி நீதிபதி இளவழகன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். சிறப்பு புலனாய்வுக்குழு 5 நாள் விசாரணை நடத்த வேண்டும் என கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அக். 9-ம் தேதி மதியழகனை நேரில் ஆஜர்படுத்தி அனுமதி கேட்டனர். மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் 2 நாட்கள் அனுமதி வழங்கியதை அடுத்து இரு நாட்கள் மதியழகனிடம் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக்குழு அக். 11-ம் தேதி நீதிமன்றத்தில் மதியழகனை ஒப்படைத்தது. இதையடுத்து அவர் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மதியழகனின் ஜாமீன் மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளதால் விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதி இளவழகன் ஒத்திவைத்தார்.
மதியழகன், பவுன்ராஜின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்த நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்து சிறப்பு புலனாய்வுக்குழு இருவரையும் வீடியோ கான்பரன்ஸில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்ய எஸ்ஐடி சார்பில் அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
அதற்கு தவெக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மேலும் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கருத்தை நேரில் கேட்டப்பிறகே காவல் நீட்டிப்பு குறித்து முடிவு செய்யவேணடும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் வி.பி.மதியழகன், பவு ன்ராஜ் இருவரையும் இன்று (அக். 15ம் தேதி) நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து வி.பி.மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் மாஜிஸ்ட்ரேட் பரத்குமார் முன்னிலையில் இன்று (அக். 15ம் தேதி) ஆஜர்படுத்தப்பட்டனர்.
தவெக வழக்கறிஞர் சீனிவாசன், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளதாலும், எஸ்ஐடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு கேட்க முடியாது இருவரையும் விடுவிக்கவேண்டும் என சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வாதாடினார். அரசு தரப்பில் அவர்களுக்கு காவல் நீட்டிப்பு கேட்கவில்லை சிபிஐ நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் பரத்குமார் வி.பி.மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவ ருக்கும் காவல் நீட்டிப்பு வழங்க மறுத்து விடுவித்தார். இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பிரமாண பத்திரம் வழங்கியப்பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.