நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த ஒரு பெண்ணை (68) போலீஸார் மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு தனது சொந்த ஊர், தனது கணவர், மகன், உறவினர்களைப் பற்றிய தகவலை கூறினார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினரும் சமூக சேவை கண்காணிப்பாளரும் அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை சேகரித்தனர். அப்போது, அந்த பெண் 22 ஆண்டுகளுக்கு முன்வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. அதன்பிறகு மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பந்திரியில் விசாரித்தனர்.
அப்போது அந்தப் பெண் கூறிய விவரங்கள் ஒத்துப்போன ஒரு குடும்பத்தாரை கண்டுபிடித்தனர். இதையடுத்து, நாக்பூரில் இருந்து அந்த பெண்ணை அழைத்து சென்று கடந்த திங்கட்கிழமை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது 30 வயதான அந்தப் பெண்ணின் மகன், தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அதை பார்த்து அனைவரும் நெகிழ்ந்து போயினர். அத்துடன் அவரது கணவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்.
