“2 நாள் உனக்கு டைம்; என்னுடைய வீரியத்தை பார்ப்பாய்'' – பெண் அதிகாரியை தரக்குறைவாக பேசிய விசிக மா.செ

கன்னியாகுமரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார் பாரதி. சமீபத்தில், நாகர்கோவில் அருகே உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து, அனுமதியின்றி இயங்கி வருவதாக கூறி மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாரதியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு ஆதரவாக நேற்று நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (ரெட் ஸ்டார்) மாவட்ட செயலாளர் மணவை கண்ணன் ஆகியோர் மிகவும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளால் பெண் அதிகாரி பாரதியை விமர்சித்து பேசியுள்ளனர்.

வி.சி.க ஆர்ப்பாட்டம்
வி.சி.க ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அல்காலித் பெண் அதிகாரி குறித்து பேசியதாவது:

“உனக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் இருக்கிறது. ஒரு கம்பெனியை மூடுவதற்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? அட நாயே, உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? லஞ்சப் பேர்வழி பாரதியே, தைரியம் இருந்தால் நீ வந்து பண்ணிப்பார். இரண்டு நாட்கள் உனக்கு டைம் தருகிறேன்; அதற்குள் மின் இணைப்பை வைக்காவிட்டால் அப்போது என்னுடைய வீரியத்தை நீ பார்ப்பாய். பாரதிக்கு நேரடியாக சவால் விடுகிறேன்- அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்று நீ பார்ப்பாய்.

அந்த சீட்டில் இருந்து நீ சஸ்பெண்ட் செய்யப்படுவாய். அதற்கான வேலைகளை விடுதலை சிறுத்தைகளும் அந்த நிறுவனமும் எடுக்கும். முறையான சில அனுமதிகள் அங்கு இல்லை; அதற்கான நடவடிக்கைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. அதற்காக அந்த கம்பெனியை மூடிவிடுவாயா? உனக்கு தெம்பு இருந்தால், நாணம் இருந்தால் என்மீது மானநஷ்ட வழக்கு போடு.”

இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

வி.சி.க மாவட்டச் செயலாளர் அல்காலித்

பெண் அதிகாரியை “நாய்” எனவும் “சங்கி” எனவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசியதாக, அதிகாரி பாரதி வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், பேக்கரி உரிமையாளர் முகமது இஸ்மாயிலின் தூண்டுதலின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் மற்றும் மணவை கண்ணன் ஆகியோர் சிலருடன் போராட்டம் நடத்தி, தன்னை அவதூறாகப் பேசி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு, பெண் அதிகாரி பாரதியின் புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அல்காலித், மணவை கண்ணன் மற்றும் பேக்கரி உரிமையாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.