“செங்கோட்டையன் திமுகவின் பி-டீம்'' – கட்சியில் இருந்து நீக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம்

எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
“செங்கோட்டையனின் நடவடிக்கையை கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் கவனித்து வருகிறோம். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று. இது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம். பல ஆண்டுகளாக விவசாய பெருங்குடி மக்கள் இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.

அம்மா இருந்த காலத்திலேயே அந்த திட்டம் உருவாக்கப்பட்டது. அம்மாவுடைய அறிவிப்புக்கு இணங்க நான் முதலமைச்சராக இருந்தபோது திட்டப் பணிகள் தொடங்கி, 85% பணிகள் நிறைவு பெற்ற பின்பு தான் ஆட்சி முடிந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடந்தது. திட்டம் முடிவடைந்த நிலையில், அங்குள்ள விவசாய பெருங்குடி மக்கள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், விவசாய சங்கங்களும், அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக பாராட்டு தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அந்த பாராட்டு விழா கட்சி சார்பற்ற நிகழ்ச்சியாக நடைபெற்றது. ஆனால் அப்போது கே.எஸ். செங்கோட்டையன் அவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் 30% ஏரிகள் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இருந்தும், அவர் வேண்டுமென்றே ‘அம்மா படம், புரட்சித்தலைவர் புகைப்படம் இடம்பெறவில்லை’ எனக் கூறி கலந்து கொள்ள மறுத்தார்.

விவசாயிகள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் கருத்து ஒன்றாக இருந்தது – “ஒரு கட்சியின் தலைவர்கள் இடம்பெறக் கூடாது” என்றனர். ஆனால் செங்கோட்டையன் அவரே தனது தொகுதியில் நடைபெற்ற இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் படங்கள் இடம்பெறாத நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் படங்கள் மட்டுமே இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது இருந்தே அவர் திட்டமிட்டே இப்படிப் பேசத் தொடங்கினார். இப்போது உண்மை வெளிவந்துவிட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என அவர் கூறுவது தவறான கருத்து. அவருடன் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அல்ல.

ஓ.பி.எஸ். விவகாரத்தில் பொதுக்குழுவே சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அவர் நீக்கப்பட்ட பின் அவரிடம் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது நான் எடுத்த முடிவு அல்ல, பொதுக்குழு முடிவு. கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். அதற்கு எதிராக செயல்பட்டால் தலைமை முடிவு எடுக்கும்.

எப்போதும் “நான் அம்மா விசுவாசி” என கூறும் செங்கோட்டையனை அம்மா அமைச்சரவையில் இருந்து நீக்கியது ஏன்? நான் முதலமைச்சராக ஆன பிறகுதான் அவருக்கு அமைச்சர்பதவி கொடுத்தோம். மாவட்டச் செயலாளர் பதவியும் அம்மா இருக்கும் போது நீக்கப்பட்டதே.

டி.டி.வி. தினகரனை அம்மா பத்தாண்டுக்கு முன்பே அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியிருந்தார். அவர் பத்து ஆண்டுகள் சென்னைக்கு வரவே இல்லை. அம்மா மறைந்த பின் சசிகலா காலத்தில் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதுவும் இணைக்காமல், பதவி மட்டும் கொடுக்கப்பட்டது.

அம்மா நீக்கிய ஒருவருக்கு பதவி கொடுத்தது தவறு. அம்மா ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை நீக்கியிருந்தார். பத்து ஆண்டுகள் வனவாசம் போனவர் இன்று எங்களைப் பற்றி பேசுகிறார்.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

திமுகவின் பி-டீம்

அம்மா ஆணையிட்டபடி நாங்கள் செயல்பட்டவர்கள். இன்று வரை கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறோம். அதனால் தான் இந்த பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் செங்கோட்டையன் அவ்வப்போது பச்சோந்தியாக மாறுபவர்.

அவர் சட்டமன்றத்திலும் பொதுக்கூட்டங்களிலும் திமுகவுக்கு எதிராக ஒருபோதும் பேசியதில்லை. அதனால் அவர் திமுகவின் பி-டீம் என்பது நிரூபணமாகிவிட்டது.

செங்கோட்டையனை நீக்கியதற்கு பிறகு நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்துள்ளனர். அவர் இயக்கத்திற்கு துரோகம் செய்தவர் என்பதற்கான சான்றிதழ் அது.

இந்த இயக்கம் சாதாரணமல்ல; 2.5 கோடி தொண்டர்களின் இயக்கம். இதை பலவீனப்படுத்த யார் முயன்றாலும், இயக்கம் அமைதியாக இருக்காது.

கொடநாடு பிரச்சனை குறித்து பேட்டி அளித்துள்ளார். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கட்சிக்கு எதிராக வன்மதனமாக நடக்கும் ஒருவரை எப்படி வைத்திருக்க முடியும்? தலைமைக்கு விரோதமாக செயல்பட்டால் தலைமை அமைதியாக இருக்காது. இவர்களே நீக்கப்பட்டவர்கள்.

ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா இருவரும் அம்மா மறைவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் எதிராக வாக்களித்தவர்கள். இவர்கள் எல்லாம் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள்.

இ.பி.எஸ்.-சசிகலா-ஓ.பி.எஸ்.
இ.பி.எஸ்.-சசிகலா-ஓ.பி.எஸ்.

நாங்கள் அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம், ஆனால் அவர் அதற்கு மாறாக நடந்தார். பிறகு கட்சியின் தலைமையகத்தை கைப்பற்ற முயன்றார். ஆட்களை அழைத்து சென்று அலுவலகத்தை உடைத்தார்- எல்லா தொலைக்காட்சிகளிலும் அது ஒளிபரப்பானது. வழக்கு இன்னும் நடக்கிறது. இப்படிப்பட்டவர்கள் கட்சிக்கு உண்மையா? பதவி இல்லையென்றால் எதற்கும் செல்வார்கள்.

நான்கு நாட்களுக்கு முன் “திமுக ஆட்சிக்கு வாய்ப்பு உள்ளது” என கூறியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதில்லை, திமுகவை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள் என்பது வெளிப்படையாகிறது.

டி.டி.வி. தினகரனும் அடிப்படை உறுப்பினர் அல்லர்; அவருக்கு எங்கள் கட்சி பற்றி பேச தகுதி இல்லை. இவர்களெல்லாம் சேர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் பி-டீமாகச் செயல்பட திட்டமிட்டுள்ளனர்.

`திமுகவில் சரண் அடைந்துவிட்டனர்’

ஆட்சிக் கவிழ்ப்பதற்கு 18 எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்றவர் டி.டி.வி. தான். இப்படி துரோகம் செய்தவர்கள் இன்று வெளிச்சமாய் தெரிகிறார்கள்.

ஓ.பி.எஸ். சசிகலா பற்றி என்ன கூறினார் என்பது சமூக வலைதளத்தில் உள்ளது – மக்கள் பார்த்து தெரிந்துகொள்ளட்டும்.

அம்மா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா காரணம் சொல்லவில்லை என ஓ.பி.எஸ். கூறியிருந்தார். “குற்றவாளி சசிகலா தப்பியது தமிழகம்” என்றும், “சரண் அடைய உத்தரவிடுங்கள்” என்றும் சொன்னவர் அவர் தானே.

சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதே இவர்களின் இயல்பு.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பே செங்கோட்டையனுக்கு அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அம்மா இருந்திருந்தால் கொடுத்திருக்க மாட்டார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன்

அவருடன் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்னோடு எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர் சொல்வது எல்லாம் பொய் செய்தி. மாய உலகம் உருவாக்கி, அந்தப் பகுதியில் சிற்றரசர் போல நடந்துகொண்டார். ஆனால் இன்று மக்கள் விடுதலை பெற்றுள்ளனர், அதனால் தான் நகரச் செயலாளர்கள் இனிப்பு வழங்குகிறார்கள்.

இதிலிருந்து அவருடைய செயல்பாடு தெரிகிறது. நீதிமன்றத்தின் மூலம் பொதுச் செயலாளர் பதவி உறுதிசெய்யப்பட்டது. அதைப் பற்றி குற்றம் சொல்வது தேவையில்லை.

இவர்களெல்லாம் திமுகவில் சரண் அடைந்துவிட்டனர். என்னை ‘ஏடிஎம்’ என்கிறார்கள்- அவர்கள் எப்போதாவது திமுகவை தாக்கி பேசியிருக்கிறார்களா? சட்டசபையில் நான் தொடர்ந்து பேசி வருகிறேன்.

யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என மக்களுக்கு தெரியும். இறுதியில், கட்சிக்கு விரோதமாக நடந்ததால் அவர் நீக்கப்பட்டார்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.