சேலம்: பொதுமக்களுக்கு அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 13 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக செயல்படுத்தியதன் மூலம் திமுக 13 மதிப்பெண் பெற்று ‘பெயில்’ ஆகிவிட்டது. அடுத்த 6 மாதத்தில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும், என அன்புமணி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில் வசிஷ்ட நதியை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது: மேட்டூர் உபரி நீரை சரபங்கா நதியுடன் இணைத்து வசிஷ்ட நதிக்கு கொண்டு வருவதன் மூலம் இப்பகுதியில் விவசாயம் செழிக்கும், குடிநீர் பஞ்சம் தீரும். வசிஷ்ட நதி மாசுபட்டுள்ளதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தியாவில் 623 நதிகளை ஆய்வு செய்ததில், 37 நதிகள் மாசுபட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 5 நதிகள். இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள திருமணிமுத்தாறு, சரபங்கா நதி, வசிஷ்ட நதி என்றபோது, எந்தளவு அரசின் செயல்பாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
திமுக ஆட்சியில் தினமும் ஒரு ஊழல் வெளி வந்து கொண்டிருக்கிறது. தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில் நெல் மூட்டைகளை கொண்டு செல்ல 3 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதில் ஒரு டன்னுக்கு, ஒரு கி.மீ.க்கு ரூ.598 அரசு வழங்குகிறது. ஆனால், அதற்கு ஆகும் செலவு வெறும் ரூ.140 மட்டுமே. 3,200 வாகனங்களுக்கு சுமார் ரூ.200 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. இதுசம்பந்தமாக சிபிஐ விசாரித்தால் உண்மை வெளிவரும்.
தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். கடந்த நான்கரை ஆண்டுகளில் பொதுமக்களுக்கு அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 13 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக செயல்படுத்தியதன் மூலம் திமுக 13 மதிப்பெண் பெற்று ‘பெயில்’ ஆகிவிட்டது. இனியும் திமுக கூறும் பொய்யை மக்கள் நம்ப தயாராக இல்லை. அடுத்த 6 மாதத்தில் பாமக ஆட்சி தமிழகத்தில் அமையும்.
எல்லா துறையிலும் ஊழல் மயமாகிவிட்ட திமுக ஆட்சியில் தொழில் துறை மூலம் அன்னிய முதலீடுகளாக ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி ஈர்த்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெறும் ரூ.1 லட்சம் கோடி மட்டுமே முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், தர முடியாது என்கின்றனர். இதுவே, அதிமுக ஆட்சியில் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் அப்போது வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். மூன்றாவது அணி உருவாகுமா என்றால் போகப்போக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.