தூங்கப் போகுமுன் செல்போன் திரையைப் பார்க்கிறீர்களா? – எச்சரிக்கும் புதிய ஆய்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பகலானாலும் சரி, இரவானாலும் சரி, ஓய்வெடுக்கப் போகும் முன் செல்போனை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பதுதான் இன்று பலரின் பழக்கம். குறிப்பாக இரவில் மொபைல் பார்த்தபடி தூங்குவது பலரின் பழக்கம் ஆகிவிட்டது. ஆனால், இந்த பழக்கம் நாளடைவில் உங்கள் இதயத்தை பாதிக்கக் கூடும் என்பது  உங்களுக்குத் தெரியுமா?

ஆம், நான் சமீபத்தில் வாசித்த ஒரு ஆய்வுக் கட்டுரை என்னை அதிர்ச்சி அடைய செய்தது.  அதைப் பற்றி இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன். 

ஒன்பது ஆண்டுகால ஆராய்ச்சி சொல்லும் உண்மை!

ஆஸ்திரேலியாவின் ஃப்ளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு முக்கியமான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதற்காக, இங்கிலாந்தைச் சேர்ந்த சுமார் 89,000 பேரை, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்காணித்தனர். அவர்களின் கைகளில் Sensors பொருத்தப்பட்டது. அதன் மூலம், அவர்கள் இரவு நேரத்தில் எந்தளவுக்கு டிஜிட்டல் திரை வெளிச்சத்துக்கு ஆட்படுகிறார்கள் என்ற தரவுகள் சேகரிக்கப்பட்டன.

ஆய்வின் முடிவில், இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்துக்குத் தொடர்ந்து ஆளானவர்களுக்கு, இதயச் செயலிழப்பு (Heart Failure) வருவதற்கான அபாயம் 56 சதவீதம் வரை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இது இருதய நோய்கள் வருவதற்கான ஒரு பெரிய ஆபத்துக் காரணியாக உருவெடுத்துள்ளது. 

இந்த ஆய்வின்படி பார்த்தால், இந்த விஷயத்தில் குறிப்பாக, 40 வயதைக் கடந்தவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! ஆம், இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்துக்கு நம்மை நாமே வெளிப்படுத்துவதும், குறிப்பாக உறங்கச் செல்லும் முன் கைபேசித் திரையின் நீல ஒளியைப் பார்ப்பதும், இதயச் செயலிழப்பு (Heart Failure) அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்கிறது இந்த புதிய ஆய்வு. 

நமது உடலில் உள்ள ‘சர்காடியன் கடிகாரம்’ (Circadian Clock) எனப்படும் இயற்கையான சுழற்சியை, இரவு நேர வெளிச்சம் குழப்பிவிடுவதே இதற்குக் காரணம். இந்தக் குழப்பம், நாளடைவில் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.

இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்திற்கு தங்களை ஆட்படுத்துபவர்களுக்கு, இதயச் செயலிழப்பு மட்டுமல்லாமல், வேறு சில இருதய நோய்களும் அதிகரிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செய்ய வேண்டியது என்ன?

இரவு நேரத்தில் அதிக டிஜிட்டல் திரை ஒளிக்கு நம்மை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதே நம் இதயம் மற்றும் உடலைப் பாதுகாக்கும் ஒரே வழி என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். 

  • உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே செல்போன், லேப்டாப் போன்ற அதிக ஒளி தரும் திரைகளைப் பார்ப்பதை முழுமையாக நிறுத்துங்கள்.

  • இரவு நேரங்களில், குறைவான ஒளி (Dim Lights) தரும் விளக்குகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

இந்த எளிய மாற்றத்தைச் செய்வதன் மூலம், உங்கள் விலைமதிப்பற்ற இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும். இனியாவது, ‘இரவு வணக்கம்’ செல்போனுக்கு அல்ல, நிம்மதியான உறக்கத்துக்குச் சொல்லுங்கள்!

Source : Study published in the Journal of the American Medical Association (JAMA)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.