புதுடெல்லி,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கியது. இதில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் இன்று நடந்தது. இதில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி-புனேரி பால்டன் அணிகள் சந்தித்தன.
ஆட்டத்தின் முதல் பாதியில் டெல்லி அணி 20 புள்ளிகளும், புனே அணி 14 புள்ளிகளும் எடுத்திருந்தன. முதல் பாதி முடிவில் புனே அணி 6 புள்ளிகள் பின் தங்கி இருந்தாலும், இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி டெல்லி அணிக்கு சவால் அளித்தது. ஆனால் ஆட்டத்தில் இறுதியில் அந்த அணியால் முன்னிலை பெற முடியவில்லை.
இறுதியில் டெல்லி அணி 31-28 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் தபாங் டெல்லி அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. சாம்பியன் பட்டம் வென்ற டெல்லி அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெற்ற புனே அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.