‘வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது’ – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. அத்தகைய அச்சுறுத்தலை தடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளான நம்முடைய கடமை.” என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. பாமக, நாதக, தவெக, அமமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தன.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஜனநாயகத்தின் உடலும், உயிரும் வாக்குரிமைதான். இப்போது வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. அத்தகைய அச்சுறுத்தலை தடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளான நம்முடைய கடமை. அதனால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க இங்கே கூடியுள்ளோம்.

நாம் எந்த சீர்திருத்தத்துக்கும் எதிரி அல்ல. ஆனால், மக்களின் வாக்குரிமையை பறிக்கும், அவர்களை அச்சுறுத்தும் வகையில் பிஹாரில் செயல்படுத்தப்பட்ட எஸ்ஐஆர், இப்போது தமிழ்நாட்டில் நடக்கப்போகிறது. இதற்கு எதிரான உணர்வை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவை. நேர்மையான தேர்தலை நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கு உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும். பதற்றமில்லாத சூழலில்தான் அதனை செய்ய வேண்டும்.

தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் சூழலில், முழுமையான திருத்தப் பணிகளை செய்ய துடிப்பது, உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே. அதனையே பிஹாரில் செய்தனர். இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்ய நினைக்கிறார்கள். தமிழக மக்களின் உரிமையை காக்க, ஜனநாயகத்தை காக்க வரைவு தீர்மானத்தை முன்வைத்துள்ளோம்” என்றார். இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

தீர்மானம்: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஹாரில் நடைபெற்ற குளறுபடிகளை சரி செய்யாமல் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர். நடத்துவது வாக்குரிமையை பறிக்கும் செயல் என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் சமூக வலைதள பதிவு: இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆருக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் – ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காததால், உச்ச நீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் எஸ்ஐஆர் குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.