“அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை" – CJI கவாய் ஓபன் குற்றச்சாட்டு!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலித் மற்றும் முதல் பௌத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்.

இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதுதான், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரசே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்து வந்த புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு கடிவாளம் போடப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் இவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு இவர் தலைமையிலான அமர்வுதான், மாநில அரசுகள் கொண்டுவரும் மசோதாக்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பதற்கான கால வரம்பை நிர்ணயித்தது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பிஆர். கவாய்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பிஆர். கவாய்

இதைக் குடியரசுத் தலைவர் மூலமாக மத்திய அரசு மறைமுகமாக எதிர்த்தபோதும் கவாய் தனது தீர்ப்பில் உறுதியாக இருந்தார்.

இவ்வாறிருக்க, சமீபத்தில் விஷ்ணு சிலை தொடர்பான வழக்கை கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தபோது, 71 வயது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கவாய் மீது காலணி வீசித் தாக்க முயன்ற சம்பவம் (அக்டோபர் 6) தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும், கவாய் பெருந்தன்மையாக அந்த நபர் மீது சட்ட ரீதியான எடுப்பதைத் தவிர்த்துவிட்டார். ஆனால் ராகேஷ் குமாரோ, தனக்குப் பயமில்லை எனவும், தான் வருத்தப்படப்போவதில்லை எனவும் கூறிவந்தார்.

இவற்றுக்கு மத்தியில் நவம்பர் 23-ம் தேதியோடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து கவாய் ஓய்வுபெறப்போகிறார்.

இந்த நிலையில், அரசுக்கெதிரான வழக்கைத் தனது அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை எனக் கவாய் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

முன்னதாக, பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சேவை நிபந்தனைகளை ஒரே மாதிரியாக்கும் தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்துக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அவற்றைத் தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த விசாரணையில் மனுதாரர்களின் இறுதி வாதங்கள் வரை அனைத்தும் விசாரிக்கப்பட்டுவிட்ட நிலையில், அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் பங்கேற்க வேண்டுகோள் வைத்ததன் பேரில் சில நாள்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறிருக்க, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்கு முந்தைய நாள் நள்ளிரவு திடீரென மத்திய அரசு, இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றக் கோரிக்கை விடுத்தது. இது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் திடீர் நள்ளிரவு கோரிக்கையின் பின்னணியை உணர்ந்த தலைமை நீதிபதி கவாய், “மத்திய அரசு இதுபோன்ற உத்தியைக் கையாண்டு நீதிமன்றத்துடன் விளையாடும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

மனுதாரர்கள் தங்களின் வாதங்களை முடித்த பிறகு மத்திய அரசு இவ்வாறு கோரிக்கை வைப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்.

அரசுக்கெதிரான வழக்கை எனது அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.

விரைவில் நான் ஓய்வுபெறப்போவதால்தான் மத்திய அரசு இப்படியொரு நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதையும் கவனிக்கிறேன்” என்று கூறினார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பிஆர். கவாய்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பிஆர். கவாய்

தலைமை நீதிபதியின் கூற்றைத் தொடர்ந்து அட்டர்னி ஜெனரல், “அரசாங்கத்தின் நோக்கம் நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துவது அல்ல.

ஒரு பெரிய அமர்வால் பரிசீலிக்கப்பட வேண்டிய அரசியலமைப்பு விளக்கம் தொடர்பான பெரிய கேள்விகள் இருப்பதாக உணர்கிறோம்” என்று மத்திய அரசின் கோரிக்கையை நியாயப்படுத்த முயன்றார்.

இருப்பினும் தன முடிவில் உறுதியாக இருந்த கவாய், “முதலில் அரசாங்கம் நள்ளிரவில் மனுவைத் தாக்கல் செய்தது நீதிமன்ற நடைமுறையை மீறும் செயல்.

இந்த விஷயத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைப்பது அவசியம் என்று நாங்கள் நினைத்தால், நாங்களே அதைச் செய்வோம்” என்று தீர்க்கமாகக் கூறி வழக்கை நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.