இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்திய 13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது.
அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அனைவரின் கூட்டு முயற்சியால் முதல் உலகக் கோப்பை வசப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபோது சுனில் கவாஸ்கர் தனக்கு அளித்த வாக்குறுதியைச் சுட்டிக் காட்டி தான் ரெடியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கெதிரான அரையிறுதியில் சேஸிங்கில் ஜெமிமா 40+ ஓவர்கள் அசராமல் ஆடி சதமடித்து கடைசிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.
அப்போது சுனில் கவாஸ்கர், “இந்தியா உலகக் கோப்பையை வென்றால், அவருக்கு (ஜெமிமா) ஓகே என்றால் அவருடன் சேர்ந்து பாடுவேன். அவர் தனது கிட்டாரை எடுத்துக்கொள்ளட்டும், நான் பாடுகிறேன்.
ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாங்கள் இதைச் செய்திருக்கிறோம்.
எனவே, இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் அதை மீண்டும் நான் நிகழ்த்த விரும்புகிறேன். அவருக்கும் அதில் மகிழ்ச்சி என்றால் நான் தயார்” என்று கூறியிருந்தார்.
இவ்வாறிருக்க இந்தியா உலகக் கோப்பையை வென்றுவிட்ட நிலையில் ஜெமிமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவாஸ்கர் வாக்குறுதியளித்த வீடியோவையும், ஏற்கெனவே தாங்கள் இருவரும் இணைந்து பாடிய வீடியோவையும் பதிவிட்டு, “ஹாய் சுனில் கவாஸ்கர் சார், உங்களுடைய மெசேஜை பார்த்தேன்.
இந்தியா வென்றால் இருவரும் இணைந்து பாடலாம் என்று கூறியிருந்தீர்கள். இப்போது கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கிறேன், நீங்கள் மைக்குடன் ரெடியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று வீடியோவில் கூறியிருக்கிறார்.