சூரத்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஜிரா கிராமத்தில் உள்ள 290 விவசாயிகளின் போலி கடன்களை அடைக்க ரூ.90 லட்சத்தை சூரத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் கொடுத்து உதவியுள்ளார்.
மனிதநேயம் மற்றும் தாராளமனப்பான்மைக்கு தனது தாயாரின் நினைவுநாளில் சூரத் தொழிலதிபர் செய்த இந்த சம்பவம் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. அம்ரேலி மாவட்டம் ஜிரா கிராமத்தில் உள்ளூர் கூட்டுறவு சங்கத்தில் அதன் நிர்வாகிகள் கிராமத்தில் உள்ள படிக்காத ஏழை விவசாயிகளின் பெயரில் கடன்பெற்று மோசடி செய்துள்ளனர்.
இதனால் அந்த 290 விவசாயிகளும் அரசு திட்டங்கள், நிதி உதவி மற்றும் சட்டப்பூர்வமாக கடன் பெறும் தகுதியை இழந்தனர். இந்த பொய் கடன்கள் நிதி நம்பகத்தன்மையை அழித்தது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கையையே சூனியமாக்கி விட்டது. இந்த சுமை தலைமுறை சாபமாக மாறியது. இதனை அறிந்த சூரத்தைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர் பாபுபாய் ஜிராவாலா விவசாயிகளை அந்த துயரிலிருந்து மீட்க தயாரானார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “விவசாயிகள் நேர்மையானவர்கள். ஆனால், பிறரின் சதியால் அவர்கள் அநீதியில் சிக்கிக் கொள்கின்றனர். நீ வாழ்க்கையில் உயர்ந்தால் அவர்களின் துன்பத்தைக் குறைக்க உனது வெற்றியை பயன்படுத்த வேண்டும் என்ற போதனையை எனது தாயார் ஏற்கெனவே வழங்கியுள்ளார் அதுதான் இப்படி என்னை செயல்பட தூண்டியது’’ என்றார்.
நிலுவை தொகை இல்லை: இதையடுத்து தனது மூத்த சகோதரர் கன்ஷ்யாம்பாய் ஜிராவாலாவுடன் சேர்ந்து பாபுபாய் கூட்டுறவு வங்கியில் ரூ.89,89,209 டெபாசிட் செய்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் என்ஓசி எனப்படும் ‘‘நிலுவை தொகை இல்லை’’ என்ற சான்றிதழ் கிடைப்பதை உறுதி செய்தார்.
ஜிரா கிராமத்தில் அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்ட போது வயதான விவசாயிகள் கண்ணீர்விட்டு அழுது தங்களது கண்ணியத்தை மீட்டெடுத்ததற்காக பாபுபாயை வணங்கி ஆசீர்வதித்தனர். அப்போது அவர்கள் தங்களது நீண்ட கால கடினமான கனவு முடிவுக்கு வந்ததாக தெரிவித்தனர்.