இன்று விராட் கோலி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விராட் மற்றும் அனுஷ்கா சர்மாவின் சொத்து விவரங்கள் பற்றி பார்ப்போம். இந்தியாவின் பவர் கப்பிள் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தங்களது துறைகளில் மட்டுமல்ல சொத்து மதிப்பிலும் உச்சத்தில் உள்ளனர். 2025ம் ஆண்டின் கணக்குப்படி, இருவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1300 கோடியை தாண்டி, இந்தியாவின் பணக்கார பிரபல ஜோடிகளில் ஒருவராக அவர்களை நிலைநிறுத்தியுள்ளது. கிரிக்கெட் சம்பளம், படங்களின் வருமானம், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் வெற்றிகரமான தொழில் முயற்சிகள் என இவர்களின் வருமானம் பல வழிகளில் பெருகி வருகிறது.
Add Zee News as a Preferred Source

கிங் கோலியின் பிரம்மாண்ட சொத்து மதிப்பு
2025ம் ஆண்டின்படி, விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.1050 கோடியாகும். இது கடந்த 2024ம் ஆண்டை விட (ரூ.950 கோடி) கணிசமான வளர்ச்சியாகும். பிசிசிஐ-யின் A+ கிரேடு ஒப்பந்தம் மூலம் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் பெறுகிறார். மேலும், ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம் மற்றும் டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் என போட்டி வாரியாகவும் சம்பளம் பெறுகிறார். ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஒரு சீசனுக்கு ரூ.21 கோடி சம்பளமாக பெறுகிறார். தற்போது டெஸ்ட் மற்றும் டி20யில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் ஒருநாள் போட்டிக்கு மட்டும் சம்பளம் பெறுகிறார்.
Puma, MRF, Tissot, Manyavar போன்ற பல முன்னணி பிராண்டுகளின் விளம்பர தூதராக இருக்கும் கோலி, ஒரு ஒப்பந்தத்திற்கு சுமார் ரூ.7.5 முதல் ரூ.10 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார். சமூக வலைதளங்களிலும் கோலியின் ஆதிக்கம் தொடர்கிறது. இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.8.9 கோடியும், ட்விட்டரில் ஒரு பதிவுக்கு ரூ.2.5 கோடியும் சம்பாதிக்கிறார். கிரிக்கெட்டைத் தாண்டி One8 என்ற ஆடை பிராண்ட், உணவகங்கள் மற்றும் பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்து, ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் வலம் வருகிறார்.
அனுஷ்கா சர்மாவின் அசர வைக்கும் வளர்ச்சி
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மாவின் நிகர சொத்து மதிப்பு, 2025ல் ரூ.255 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ.7 கோடி வரை சம்பளம் பெறும் இவர், Manyavar, Nivea, Garnier, Tanishq போன்ற பல பிராண்டுகளின் விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.5 முதல் ரூ.10 கோடி வரை சம்பாதிக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு சுமார் ரூ.95 லட்சம் பெறுகிறார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Clean Slate Filmz மூலம், NH10, Pari, Paatal Lok போன்ற வெற்றிகரமான படைப்புகளை தயாரித்துள்ளார். மேலும், தனக்கென ஒரு ஆடை பிராண்டையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
ஆடம்பர வாழ்க்கை
இந்த நட்சத்திர தம்பதி தற்போது தங்கள் குழந்தைகளான அகாய் மற்றும் வாமிகாவுடன் லண்டனில் வசித்து வருகின்றனர். மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான வீடு மற்றும் அலிபாக் நகரில் ரூ.19 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு இவர்களுக்கு சொந்தமாக உள்ளது. Lamborghini Urus, Audi R8 மற்றும் Range Rover போன்ற உலகின் முன்னணி சொகுசு கார்களையும் இவர்கள் வைத்துள்ளனர். மொத்தத்தில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இருந்து கொண்டே, தங்களது மதிப்பை எவ்வாறு பன்மடங்கு பெருக்குவது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றனர்.
About the Author
RK Spark