கும்பகோணம்: வரும் டிச.20-ம் தேதி டிஆர்பி மூலம் 2700 பேருக்கு நிரந்தர பேராசிரியர் பணி நியமிப்பதற்கான உத்தரவு வழங்கப்படவுள்ளன என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராசு தலைமை வகித்து உரையாற்றினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டில், 17 துறைகளில் படித்து தேர்ச்சி பெற்ற 2787 இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கூறியதாவது: கும்பகோணம் அரசினர் கல்லூரி தஞ்சாவூர் மாவட்டத்திலேயே பழமையான கல்லூரி. 171 ஆண்டுகள் பழமையான கல்லூரி மட்டுமில்லாமல், இங்கு படித்த பலர் புகழ் பெற்றவர்களாகியுள்ளார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் போது ஏற்படாத மகிழ்ச்சி, நான் படித்த கல்லூரியில் பட்டம் வழங்கும் போது ஏற்படுகிறது. இதற்கு வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கு, இந்தக் கல்லூரியின் பழைய மாணவர் என்ற முறையில் நன்றி கூறுகிறேன்.
1854-ல் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டு, 1987-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. தற்போது 16 இளங்கலை, 14 முதுகலை துறைகளை கொண்ட பெருமை இக்கல்லூரிக்கு உள்ளது. இந்தக் கல்லூரியில் மாணவர்கள் அதிகமாக உள்ளார்கள். மாணவிகள் குறைவு. ஆனால் பட்டம் பெறுவதில் மாணவிகள் அதிகமாக உள்ளார்கள். இதில் 240 பேர் முதல் பட்டதாரியாக பட்டங்களைப் பெறுகிறார்கள்.
உயர் கல்வித்துறையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. பட்டம் பெறும் நாள் மாணவர்களின் திருநாளாகும். மேலும் பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள், அதற்கு காரணமான போராசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி செலுத்த வேண்டும்.
மாணவர்களாக இருந்த நீங்கள் உயர் நிலைக்கு வந்துள்ளீர்கள். இன்னும் உயரவேண்டும். தமிழக முதல்வர் உயர் கல்வியை இருகண்களில் ஒன்றாக பார்க்கின்றார். உயர் கல்வியை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப் பார்கின்றார். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பிஎச்டி முனைவர் பட்டம் பெறுவதில், அதிகமாகனோரை கொண்ட மாநிலம் தமிழகம் என்பதை தொடர்ந்து பெற்று வருகின்றோம்.
பட்டம் பெறும் மாணவர்களாகிய நீங்கள், இங்குள்ள முதல்வர், இணை இயக்குநர், பேராசிரியர்கள் போல், நீங்களும் உயர்ந்து நிலைக்கு சென்று, தாங்களும் பட்டமளிக்கும் விழாவில் பங்கேற்க வேண்டும் என சபதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் படித்த பட்டம் வீடு,நாடு, சமூகம், பயன்பாடு வளர உதவி செய்ய வேண்டும்” என்றார் அவர்.
தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அ.குணசேகரன் வாழ்த்துரையாற்றினார். இதில், தேர்வு நெறியாளர் வெ.பாஸ்கர், துறைத் தலைவர்கள் மீனாட்சி சுந்தரம், அ.ரூபி, செ.சரவணன், சே.சங்கரநாராயணன், மற்றும் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரியின் நிதியாளர் அலுவலக கண்காணிப்பாளர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்று ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியது: கடந்தாண்டுகளை விட நிகழாண்டு மாணவ, மாணவிகளின் சேர்க்கை 20 சதவீத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 34 புதிய கல்லூரிகள், 7 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் டிச.20-ம் தேதி டிஆர்பி மூலம் 2700 பேருக்கு நிரந்தர பேராசிரியர் பணி நியமிப்பதற்கான உத்தரவு வழங்கப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.