இந்தியா vs ஆஸ்திரேலியா ஹைலைட்ஸ்: 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. 2-1 என முன்னிலை

India vs Australia, T20 Series: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நடைபெற்றது. குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவலில் நடந்த இந்த போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நவம்பர் 8 ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி இலக்கு நிர்ணயிக்கும். அதேபோல ஆஸ்திரேலியா மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிகும் என எதிர் பார்க்கப்படுகிறது

Add Zee News as a Preferred Source

கான்பெராவில் உள்ள மனுகா ஓவலில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 31 ஆம் தேதி மெல்போர்னில் நடந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹோபர்ட்டில் நடந்த மூன்றாவது போட்டியில், இந்தியா அற்புதமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தியா 168 ரன்கள் இலக்கு:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இன்றைய மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு 168 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. 

ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி:

இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா 20 ஓவர்களை முழுமையாக முடிக்கத் தவறிவிட்டது. ஆஸ்திரேலியா 18.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

அக்சர் படேல் ஆட்ட நாயகனாகத் தேர்வு:

இந்திய வீரர் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் தனது சிறந்த ஆல்ரவுண்ட் செயல்திறனுக்காக அக்சர் படேல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அணியின் பேட்டிங் விவரம்:

டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்த இந்திய அணி நல்ல தொடக்கத்தை அளித்தது. இருப்பினும், 7வது ஓவரில் ஆடம் ஜம்பா முதலில் பந்து வீசி அபிஷேக் சர்மாவை (28) வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து, ஷுப்மான் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து விளையாடினார்கள். ஆனால் சிவம் துபே (22) 12வது ஓவரில் நாதன் எல்லிஸால் ஆட்டமிழந்தார். கில் 47 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார். ஆனால் எல்லிஸ் 15வது ஓவரில் அவரை கிளீன் பவுல்டு செய்தார். இதன் பிறகு, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்தது. 

16வது ஓவரில் சேவியர் பார்ட்லெட்டால் சூர்யகுமார் யாதவ் (20) ஆட்டமிழந்தார். 17வது ஓவரில் ஆடம் ஜம்பா திலக் வர்மா (5) மற்றும் ஜிதேஷ் சர்மா (3) ஆகியோரை ஆட்டமிழந்தார். 19வது ஓவரில் நாதன் எல்லிஸ் வாஷிங்டன் சுந்தரை (12) ஆட்டமிழந்தார். அதே நேரத்தில் அர்ஷ்தீப் சிங் ரன் எடுக்காமல் திரும்பினார். அக்சர் படேல் 22 ரன்களுடனும், வருண் சக்ரவர்த்தி 1 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் விவரம்:

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அளிக்கவில்லை. குறிப்பிடத்தக்க பார்ட்னர்ஷிப்கள் எதுவும் உருவாகவில்லை. ஆஸ்திரேலியா வழக்கமான இடைவெளியில் பின்னடைவுகளைச் சந்தித்தது. நான்காவது ஓவரில் மேத்யூ ஷார்ட்டை (25) வெளியேற்றி முதல் விக்கெட்டை இந்தியா வீழ்த்தியது. பின்னர் அக்சர் ஒன்பதாவது ஓவரில் ஜோஷ் இங்கிலிஸை (12) வெளியேற்றினார். சிவம் துபே பத்தாவது ஓவரில் கேப்டன் மிட்செல் மார்ஷை (30) மற்றும் 12வது ஓவரில் டிம் டேவிட்டை (14) வெளியேற்றினார். அர்ஷ்தீப் சிங் 14வது ஓவரில் ஜோஷ் பிலிப்பை (10) வெளியேற்றினார், பின்னர் வருண் சக்ரவர்த்தி 15வது ஓவரில் கிளென் மேக்ஸ்வெல்லை (2) வெளியேற்றினார்.

இன்றைய டி20 போட்டியில் ஆஸ்திரேலியா குறிப்பிடத்தக்க பார்ட்னர்ஷிப்களை உருவாக்கத் தவறியது. 17வது ஓவரில், வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, மார்கஸ் ஸ்டோய்னிஸ் (17) மற்றும் சேவியர் பார்ட்லெட்டை (0) வெளியேற்றினார். 18வது ஓவரில், பென் ட்வார்ஷியஸை (5) ஜஸ்பிரித் பும்ரா வெளியேற்றினார். இறுதியாக, வாஷிங்டன் சுந்தர் ஆடம் ஜம்பாவை வெளியேற்றி ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை 119 ரன்களில் முற்றிபுள்ளி வைத்தார்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் செயல்திறன்:

ஆஸ்திரேலியாவுக்காக நாதன் எல்லிஸ் அற்புதமாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆடம் ஜம்பாவும் 4 ஓவர்களில் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேவியர் பார்ட்லெட் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

இந்திய பந்து வீச்சாளர்களின் செயல்திறன்:

இந்தியா அணியை பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர் மிகவும் நன்றாக பந்து வீசினார். 1.2 ஓவர்களில் 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேல் மற்றும் சிவம் துபே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

About the Author


Shiva Murugesan

Shiva Murugesan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.